சென்னையில் வாடகை வீட்டை பல பேருக்கு விற்பனை செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர்கள் ஷங்கர்- நளினி தம்பதி. இதில் நளினி யோகா பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பயிற்சி நிறுவனத்தில் லதா என்பவருடன் நளினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. லதா வசதி படைத்தவர் என்பதை தெரிந்து கொண்ட நளினி, தனது கணவர் ஷங்கருடன் சேர்ந்து மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இருப்பதாகவும், அதில் உள்ள ஒரு வீட்டை குறைந்த விலைக்கு கொடுப்பதாக லதாவிடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய லதா அந்த வீட்டிற்கு 59 லட்ச ரூபாய் விலை பேசி, அதில் 35 லட்ச ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால் நளினி – சங்கர் தம்பதியினர் சொன்னபடி குடியிருப்பை கட்டாமலும், வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமலும் ஏமாற்றியுள்ளனர். இது குறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் லதா புகார் கொடுத்ததின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், கணவன்- மனைவி இருவரையும் கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.
அவர்கள் இதேபோன்று பல வீடுகளை வாடகைக்கு எடுத்து, அதை விற்பனை செய்வதாக கூறி பலரை ஏமாற்றியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








