முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பேனா நினைவுச்சின்ன கட்டுமானப்பணிகள் எவ்வாறு நடைபெறும்? தமிழக பொதுப்பணித்துறை விளக்கம்

“கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், கட்டுமானப்பணிகள் எவ்வாறு நடைபெற உள்ளது என்று தமிழக பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. அங்கு நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளக்க செய்தியில், இயல், இசை மற்றும் நாடகத் துறைகளுக்கு கருணாநிதி தனது எழுத்தாற்றல் மூலமாக ஆற்றியுள்ள தொண்டின் நினைவாக பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. இந்த நினைவுச்சின்னம் 3 பகுதிகளாக கட்டப்படும். முதல் பகுதி, கருணாநிதி நினைவிடத்தில் இருந்து கடற்கரை வரை 220 மீட்டர் நீளம், 6 மீட்டர் உயரத்தில் காங்கிரீட் பாலம் கட்டப்படும்.

இரண்டாம் பகுதி, காங்கிரீட் பாலம் முடியும் மணல் பரப்பில் இருந்து கடலுக்குள் சில மீட்டர் நீளத்தில் இரும்பு பாலம் அமைக்கப்படும். கடற்கரையின் தன்மை மாறாத வகையில் அதற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்படும். மூன்றாம் பகுதி, இரும்பு பாலம் முடியும் இடத்தில் இருந்து கடலுக்குள் 360 மீட்டர் தொலைவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும். பேனா நினைவுச்சின்னத்திற்கு செல்லும் பாலத்திற்கு 15 மீட்டர் இடைவெளியில் காங்கிரீட் தூண்கள் அமைக்கப்படும். நல்ல இடைவெளியுடன் தூண்கள் அமைக்கப்படுவதால், மீன்பிடி படகு போக்குவரத்திற்கு இடையூறு இருக்காது.

பேனா நினைவுச்சின்னம் 30 மீட்டர் உயரமும், 3 மீட்டர் விட்டமும் கொண்டதாக 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். நினைவுச்சின்னத்தை அணுகும் பாலம் 9 மீட்டர் அகலமும், கடல் பரப்பு மற்றும் மணல் பரப்பில் இருந்து 6 மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. அதுதொடர்பான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், இடர் மதிப்பீடு, பேரிடர் மேலாண்மைத் திட்டம் ஆகிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

அந்த பகுதியில் நேரிடக்கூடிய பேரிடர்களை கருத்தில் கொண்டு, அவற்றைத் தாங்கும் வகையில் உரிய தொழில்நுட்பத்தின்படி கட்டுமானம் மேற்கொள்ளப்படும். இந்த நினைவுச்சின்னத்தை காணவரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்த உள்ளது. சுனாமி, நிலநடுக்கம், புயல் ஆகியவற்றை முன்னறிய அங்கு கருவிகள் பொருத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படும். அதுபோன்ற ஆபத்தில் யாரும் சிக்கினால், வளாகத்தில் இருந்து மக்களை மீட்க பயிற்சி பெற்ற மீட்புப்படையினர் அங்கிருப்பார்கள். மீட்பின்போது மின்சார வாகனங்கள், மீட்புப் படகுகள் பயன்படுத்தப்படும்.

மீட்புக்கு வசதியாக, ஒரு நேரத்தில் 300 பேருக்கும் மேற்படாத வகையில் மக்கள் அனுமதிக்கப்படுவர். கட்டுமானத்தின் போது ஏற்படும் கழிவுகள், சூழலியல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அகற்றப்படும். கடல் மண்ணரிப்பு, மண் சேமிப்பு போன்ற ஆய்வு, தேசிய கடல்சார் ஆய்வு மையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நினைவுச்சின்னத்தால் அங்கு ஏற்பட உள்ள கூடுதல் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம், சாலை இணைப்பு பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது. மும்பையில் மாராட்டிய அரசால் அமைக்கப்படும் சத்ரபதி சிவாஜி உருவச்சிலை கட்டமைப்பை முன்னுதாரணமாக கொண்டு பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மதுக்கூர் குளம் தூர்வாரப்பட்டதற்கு பொதுமக்கள் நன்றி

Halley Karthik

நடிகர் பயில்வானை கைது செய்யக் கோரிக்கை; மனு அளித்த பெண்

G SaravanaKumar

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைவு!

Jayasheeba