“மோடி பேசியதில் 50% கூட நான் பேசவில்லை” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மாநில உரிமை, ஜிஎஸ்டி உரிமை குறித்தெல்லாம் குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி பேசியதில் 50% கூட, தான் பேசவில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அரசியல் தலைமை, வளர்ந்து வரும்…

மாநில உரிமை, ஜிஎஸ்டி உரிமை குறித்தெல்லாம் குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி பேசியதில் 50% கூட, தான் பேசவில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைமை, வளர்ந்து வரும் அரசியல் தலைவர்களுக்கான தலைவா என்ற பெயரில் பயிற்சியரங்கம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. பயிற்சியரங்கில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆஸ்பயர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பயிற்சியரங்கில் உரையாற்றிய பழனிவேல் தியாகராஜன், அரசியல் களம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினராகிய 7 வருடங்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. நிதி நிலை அறிக்கை தாக்கலானால் பலரும் ஒரு கேள்வியை கேட்பதில்லை. இதெல்லாம் ஒதுக்கீடு, இதெல்லாம் நிதி ஆதாரங்கள்….அவை கடந்த ஆண்டை விட இவ்வளவு மாறியிருக்கிறது என்பதுதான் பட்ஜெட். 2022-23 இல் இருந்து 2023-24 இல் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? என்பதுதான் என் கேள்வி.

கல்வி உள்ளிட்டவற்றில் சமமான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஜி எஸ் டி கவுன்சில் மீட்டிங், மத்திய நிதியமைச்சர் அலுவலகத்திற்கு சரியான காரணத்துடன் சென்றால் யாருடைய கருத்துக்கு என்ன மதிப்பு என்பது தெரிகிறது. ஜெயலலிதா காலத்தில் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேச பயப்படுவார்கள். அவருக்குப்ப பிறகாக பிற கட்சி உறுப்பினர்களுடன் பேசும் நிலை காணப்படுகிறது.

திராவிட இயக்கத்தின் திண்ணைப் பிரச்சாரம், மாணவர் அணி, இளைஞர் அணி போன்றவற்றினால் 1967 இல் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தினால் ஆட்சி அமைந்தது. அரசியலில் நீண்ட வெற்றிக்கு சித்தாந்தம் வேண்டும். மக்களிடம் கருத்துகளை கொண்டு செல்ல பாரம்பரிய முறைகளை பயன்படுத்த வேண்டும். சமூக ஊடகங்கள் பெரிய அளவிலான தொடர்பு சாதனங்களாக உள்ளது.

மிஸ்டர் லோக்கல், மிஸ்டர் கேரிங் என்ற பெயர் எடுக்க வேண்டும். கிரகப்பிரவேசம், காது குத்து உள்ளிட்டவற்றுக்கு செல்ல வேண்டும். இதற்கு முன்பாக இல்லாதவாறு கடந்த தேர்தலில் மண்டல வாரியாக தேர்தல் முடிவுகள் பிரிந்திருந்ததை காண முடிந்தது. ஒவ்வொரு தேர்தலும், வித்தியாசமான தேர்தல். நீங்கள் அரசியலில் வரவேண்டுமானால் முதல் தேர்வாக கவுன்சிலராகலாம். 30 தெருக்களுக்குள்ளாக நல்ல உறவை ஏற்படுத்தலாம்.

பேரணி செல்வது, சுவரொட்டிகள் ஒட்டுவதைவிட வாக்காளர்களுடன் நேரடி உறவை ஏற்படுத்துவதே வெற்றியாகும். மக்கள் விருப்பத்தால் வாக்களிக்கிறார்கள், விருப்பமின்மையால் வாக்களிப்பதில்லை. யாரெல்லாம் மக்களுக்கு சேவையாற்றுகிறார்களோ அவர்களுக்கு இதுதான் சரியான நேரம் என்றார்.

தொடர்ந்து, பயிற்சியரங்கில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பழனிவேல் தியாகராஜன், நல்ல அரசியல்வாதிக்கு 2 முக்கிய அம்சங்கள் அடையாளம். மனித நேயம் – அடுத்தவரின் துயரத்தை நீக்குவது, மக்களுக்கு தூணாக பி டி ஆர் வீட்டுக்கு போனால் நியாயம் கிடைக்கும் என்பது. அநாவசியமாக புகழ்வதாக நினைக்க வேண்டாம். முதல் முறை அமைச்சரான எனக்கு நிதியமைச்சர் என்ற பொறுப்பை முதலமைச்சர் கொடுத்தது புரட்சி.

புரட்சிகரமான முடிவை எடுத்ததற்கான கைமாறாக சிறப்பான விளைவை கொடுக்க வேண்டும். எதிர்பார்த்ததற்கு மேலாக சிறப்பான விளைவை நிறைவேற்ற முடிகிறது.
100க்காக 200 முயற்சிகள் எடுக்கிறோம். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் செய்ய வேண்டும். அநாவசியமாக எதிரி உருவாக வேண்டாம் என்பதால் அடக்கி வாசிக்கிறோம். நூல் எழுதும்போது அதனையெல்லாம் எழுதிவிட்டுப் போகிறேன்.

மாநில உரிமை, ஜிஎஸ்டி உரிமை குறித்தெல்லாம் குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி பேசியதில் 50% கூட, தான் பேசவில்லை என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.