முகக் கவசம் சரியாக அணியாமல் இருந்ததாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததாலும் தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவமனையின் நகர்புற சுகாதார நிலையத்தை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், முகக்கவசம் சரியாக அணியாமல் இருந்ததாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தாலும் தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், ஒரு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் சிகிச்சையின்போது பல ஊசிகளை போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்றின் 3 வது அலை வருவதற்கு முன்பாக பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் புதுச்சேரிக்கு தேவையான தடுப்பூசியை தர மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.







