கோலிவுட்டில் இந்த வாரம் ஏ.ஆர். காந்தி கிருஷ்ணாவின் “பிரேக்பாஸ்ட்”, புதுமுகங்கள் நடித்த “பேட்டில்”, வீர அன்பரசுவின் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” மற்றும் சாக் ஷிஅகர்வால் நடித்த “தீயோர் கூடம்” ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுக்காக…!
பிரேக்பாஸ்ட்
விஷால் அறிமுகமான செல்லமே, சுஜாதாவின் கதையில் இருந்து உருவான ஆனந்ததாண்டவம் ஆகிய படங்களின் இயக்குனர் ஏ.ஆர். காந்தி கிருஷ்ணா இயக்கியிருக்கும் படம் பிரேக்பாஸ்ட். இயக்குநர் இப்படத்தில் 2 காதல்கள், 2 திருமணத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.
காதல் திருமணம் செய்யும் இரண்டு ஜோடிகள் பின்னர் சண்டை போடுகிறார்கள், பிரிகிறார்கள். அவர்கள் இணைந்தார்களா? இல்லையா என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.
முதலில் படம் கிர்த்திக்மோகன் – அமிதா காதல் மற்றும் திருமண வாழ்வைப் பற்றி படம் பேசுகிறது. இரண்டு பேரும் துறுதுறுவென நடித்து இருக்கிறார்கள். இவர்களின் காதல் சீன்கள் பிரஷ். காதல் வாழ்க்கை, சண்டை, ஈகோ மோதல் சுவாரஸ்யமாக இருக்கிறது. இவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பவராக கஸ்துாரி வருகிறார். அவர் நடிப்பு, அவரின் கேரக்டர், கிளைமாக்ஸ் டுவிஸ்ட் ரசிக்கும்படி இருக்கிறது.
அடுத்ததாக ராணவ் – ரோஸ்மின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை. பிக்பாஸ் ராணவ் நடிப்பும், எமோஷன் காட்சிகளும் ஈர்க்கிறது. ஹீரோயின் ரோஸ்மின் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாகவும் காதல் மற்றும், கணவருடனான சண்டைக்காட்சிகளில் மிரட்டலாகவும் இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பல சீன்கள் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. சில இடங்களில் அவரின் கோபமே படத்திற்கு தடையாக உள்ளது.
ஹீரோவின் மற்றும் பெற்றோர்களாக வரும் ரங்கநாதன், அர்ச்சனா, சம்பத் வருகிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட எமோஷனல் சீன்களில் கொஞ்சம் பழைய படங்களில் தாக்கம் எட்டி பார்க்கிறது. சில சமயங்களில் ஓவர் சென்டிமென்ட் மைனஸ் ஆக இருக்கிறது. ஆனாலும், காதல் திருமணம் செய்தவர்கள், காதலிப்பவர்களுக்கு பல விஷயங்களை சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதெல்லாம் அவர்களுக்கு படிப்பினை.
எதற்கெடுத்தாலும் சண்டை, ஈகோ பிரச்னை கூடாது. டைவர்ஸ் வாங்க துடிக்க கூடாது. பெற்றோர்களை மதிக்கணும் என்பது போன்ற கருத்துகள் நச். ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், அதை கலர்புல்லாக எடுத்த விதம் கண்களுக்கு இதம். கிளைமாக்ஸ் டுவிஸ்ட் எதிர்பாராதது. படத்தின் நீளம் அதிகம். சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு, ஈகோ சண்டை இழுப்பது, புதுமுகங்கள் நடித்து இருப்பது போன்ற குறைகள் இருந்தாலும், இன்றைய சமூகத்துக்கு தேவையான கருத்தை சொல்கிறார் இயக்குனர்
பேட்டில்
பிரைவேட் ஸ்கூல் டீச்சர் ஆராத்யாவை காதலிக்கிறாார், ராப் பாடகரான அர்ஜூன் பிரபாகரன். ஆராத்யா வேலை பார்க்கும் ஸ்கூலில் ஏகப்பட்ட பிரச்னைகள். ஆராத்யா காதல் காரணமாக அர்ஜூனின் வெளிநாட்டு டூரிலும் சிக்கல்கள். இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் உதவி நினைக்கிறார்கள். அடுத்த என்ன நடக்கிறது என்பது தான் நாராயணம் இயக்கிய பேட்டில் படக்கதை.
அர்ஜூன் பிரபாகரன் ராப் பாடகராக ஓரளவு நன்றாக நடித்து இருக்கிறார். காதலிக்காக அவர் உருகுவது, சண்டைபோடுவதும் ஓகே. சமூக அக்கறையுள்ள, தனது ஸ்டூடண்ட்ஸ் மீது பாசம் காண்பிக்கிற டீச்சராக வருகிறார் ஆராத்யா. அவரின் கேரக்டர், அவர் செயல்கள், அவரின் நடிப்புதான் படத்துக்கு பெரிய பலம். பணம் சம்பாதிக்க கல்வி நிறுவனம் நடத்தும் கல்வி வள்ளலாக, வில்லனாக மிரட்டியிருக்கிறார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா. டீச்சர் ஆராத்யாவை அவர் துன்புறுத்துகிற காட்சிகளில் ஓவர் வில்லத்தனம் காண்பித்து இருக்கிறார்.
ராப் பாடகர் கதை என்றாலும், பாடல்களில் வேகம், புதுமை இல்லை. முதல்பாதியை விட, இரண்டாம் பாதியில் தான் கதை சூடுபிடிக்கிறது. காதல், ராப் சம்பந்தப்பட்ட சீன்களை விட, பிரைவேட் ஸ்கூல் பின்னணியில் நடக்கும் விஷயங்கள். பணத்துக்காக மாணவர்கள், டீச்சர்களை பாடாய்படுத்தும் நிர்வாகம், அதனால், அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாக, அழுத்தமாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, மாணவர்களின் உளவியில் பிரச்னைகளை பற்றி படம் பேசுகிறது வியாபாரம் ஆகிவிட்ட கல்வியால் சமூகத்தில் இவ்வளவு பிரச்னைகள். அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசு பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டும். தடம் மாறும் தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போட வேண்டும் என்ற இயக்குனரின் கருத்து படத்தை கவனிக்க வைக்கிறது. இதை கமர்ஷியல் பாணியில் சொல்லியிருந்தால் நன்றாக ரசித்து இருக்கலாம்
கமாண்டோவின் லவ் ஸ்டோரி
ஒரு துடிப்பான, வீரமிக்க கமாண்டோவுக்கு காதல் வருகிறது. டாக்டர் பட்டத்துக்கு ஆராய்ச்சி செய்யும் மாணவியை அவர் காதலிக்கிறார். அந்த காதல் சக்சஸ் ஆனதா? அடுத்த தலைமுறையினர் கூட அந்த காதலை பார்த்து வியப்பது ஏன்? இந்த பாணியில் தானே நடித்து இயக்கி, இந்த படத்தை கொடுத்து இருக்கிறார் வீர அன்பரசு.
விஷூவல் மீடியா படிக்கும் ஆகாஷ் முத்து தனது பிராஜக்ட்டுக்காக கமாண்டோவாக இருந்து மறைந்த தனது தந்தை வீர அன்பரசுவின் வாழ்க்கையை குறும்படமாக எடுக்க நினைக்கிறார். அப்போது தாத்தா, பாட்டி, மிலிட்டரி ஆபீசர் பப்லு மூலமாக தனது தந்தை, தாய் பற்றி பல விஷயங்கள் தெரிவதாக படம் தொடங்குகிறது. கமாண்டோவாக நடித்திருக்கும் வீர அன்பரசு ராணுவத்தின் பெருமை, அவர்களின் பணி, தேச சிந்தனை, தியாகத்தை சிறப்பாக சொல்கிறார்.
காதல் காட்சிகளில் கொஞ்சம் தடுமாறினாலும், ஆக் ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவர் காதலியாக வரும் ஏஞ்சலாக அழகாக இருப்பதுடன், ஒரு மாறுபட்ட வேடத்திலும் வருகிறார். ராணுவ அதிகாரியாக பப்லு, பாய்ஸ் ராஜன், ஹீரோ அப்பாவாக சூப்பர்குட் சுப்ரமணி, அம்மாவாக வாழை ஜானகி வருகிறார்கள். கௌரவ வேடத்தில் இயக்குனராகவே வருகிறார் பேரரசு.
காதலர்கள் சேரும் நேரத்தில் மந்திரி மகளை ஒரு கும்பல் கடத்த, அந்த ஆபரேஷனில் வீர அன்பரசுக்கு என்ன நடக்கிறது. தனது குழந்தையை எப்படி பெற்று எடுக்கிறார் ஹீரோயின் ஏஞ்சல் போன்ற விஷயங்கள் புதுமை. காதலன் விருப்பத்துக்காக, ஹீரோயின் எடுக்கும் முடிவு, அடுத்து நடக்கும் விஷயங்கள் திரைக்கதையில் விறுவிறுப்பு. பாடல்காட்சிகளில் கொஞ்சம் கவர்ச்சி இருக்கிறது. இதற்கிடையில் மகனின் காதல் காட்சிகள், அவன் ராணுவத்தின் பெருமை உணரும் காட்சிகளும் கதையில் வருகிறது. கடைசியில் அவனும் அப்பா மாதிரி ராணுவத்தில் சேரும் இடம் சிலிர்ப்பு. கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை செட்டாகி இருக்கிறது. ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள், ராணுவத்தின் தியாகம், அருமை, பெருமை சொல்வது, ராணுவ வீரர்களின் காதல், குடும்ப வாழ்க்கை, தியாகத்தை சொல்வது டச்சிங்.
தீயோர்கூடம்
சக்திவேல் இயக்கத்தில் சாக் ஷிஅகர்வால், டேனி, வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தீயோர்கூடம். இப்படத்தின் கதை ஒரே நாளில் நடக்கிறது.
ஒரு வீட்டில் கொலை நடக்கிறது. அதில் 3 பேர் சிக்கி தவிக்கிறார்கள். அவர்கள் மீண்டார்களா? அவர்கள் யார்? கொலை ஆனது யார் என்ற திரில்லர் பாணியில் படம் நகர்கிறது.
இந்த படங்கள் தவிர அஜித்தின் “அமர்களம்”, விஜயின் “சிவகாசி” எம்ஜிஆரின் “மாட்டுக்காரவேலன்”, “ரிக் ஷாகாரன்” படங்களும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளன.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்











