என்ன விலை, சண்டக்காரி, பாரிஸ் கபே, தி டார்க் ஹெவன் படங்கள் எப்படி?

இந்த வாரம் வெளியான 7 படங்களின் திரை விமர்சனம்.

இந்த வாரம் கருணாஸ் நடித்த ‘என்ன விலை’, விமல் நடித்த ‘சண்டக்காரி’, சித்து நடித்த ‘தி டார்க் ஹெவன்’, குரு சோமசுந்தரத்தின் ‘பாரிஸ் கபே’, ராகவ் நடித்த ‘பீப்’, புதுமுகங்கள் நடித்த ‘கோல்ட் கால்’ மற்றும் ‘நல்ல படம்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களின் மினி ரிவியூ இதோ!

என்ன விலை

மலையாளத்தில் தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ், விஜயலட்சுமி வீரமணி, நிமிஷா சஜயன் நடித்த கோர்ட் டிராமா. ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் போடும் காணிக்கைப் பொருட்களைச் சேகரித்து பிழைப்பு நடத்தும் கருணாஸுக்கு, ஒரு விலையுயர்ந்த தங்கப்பதக்கம் கிடைக்கிறது. அதை அவர் போலீசில் ஒப்படைத்தாலும் அவர் மீது திருட்டுப்பழி விழுகிறது. அவருக்காக வாதாடுகிறார் வக்கீல் நிமிஷா சஜயன். ஒரு கட்டத்தில் அந்த விசாரணை வேறு திசைக்குச் செல்கிறது. அரசாங்கம் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் வக்கீல். அது நடந்ததா? கருணாஸ் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டாரா என்பதே கதை.

ஒரு தனிமனிதனின் மானம், உரிமைகளைப் பற்றி அழுத்தமாகப் பேசும் கதை. அதை உணர்ந்து அப்பாவி மீனவராக, அரசாங்கம், சட்டம், போலீஸை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் தவிப்பவராகச் சிறப்பாக நடித்திருக்கிறார் கருணாஸ். அதிகார வர்க்கம் துரத்தும்போது அவர் அதிர்வதும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் எனத் துடிப்பதும் படத்தின் பிளஸ். அவர் மனைவியாக வரும் விஜயலட்சுமி வீரமணி அந்த கேரக்டராகவே மாறி, ராமேஸ்வரம் பெண்ணாகவே கலக்கியிருக்கிறார். படத்தின் பெரும்பகுதி கோர்ட்ரூம் வாதங்கள்தான். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் நிமிஷா. கருணாஸுக்காக அவர் வாதாடுவது, போலீஸின் மறுபக்கத்தைக் கொண்டு வருவது, ஒரு கட்டத்தில் அரசையே எதிர்ப்பது எனப் பல இடங்களில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். வக்கீல்களாக லொள்ளு சபா சுவாமிநாதன், ஒய்.ஜி.மகேந்திரன் வருகிறார்கள். கெட்ட போலீஸாக மோகன்ராம் வருகிறார். ஒவ்வொருவரும் கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். சாம் சி.எஸ். இசை, ஆல்பி ஒளிப்பதிவு படத்துக்கு இன்னும் பலம். கோர்ட்ரூம் டிராமாவை விரும்புகிறவர்களுக்கு, மாறுபட்ட மலையாளப் படங்களை ரசிப்பவர்களுக்கு இந்தக் கதை ரொம்பப் பிடிக்கும்.

கொஞ்சம் சீரியஸான சப்ஜெக்ட் என்பதால் வழக்கமான கமர்ஷியல் விஷயங்கள் இல்லை. கிளைமாக்ஸில் முதல்வராக வரும் பிரபு, ஜட்ஜாக வரும் பூர்ணிமா பாக்கியராஜ் என்ட்ரி சர்ஃப்ரைஸ். அரசு, சட்டம், போலீஸ், மீடியா என அனைத்தின் அத்துமீறல்கள், மறுபக்கத்தை இயல்பாகக் காண்பித்திருக்கிறார் இயக்குநர். கருணாஸ் கேரக்டர் மூலமாக இந்தச் சமூகத்தை நோக்கிப் பல கேள்விகளைக் கேட்கிறார் இயக்குநர். தனிமனிதர்களின் இழந்த மானத்துக்கு என்ன விலை என்ற கேள்வியைக் கேட்கிறது படம்.

சண்டக்காரி

மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா, பிரபு, ரேகா, சத்யன் நடித்த காதல் கலந்த காமெடிப் படம். லண்டனில் அதிகாரியாக இருக்கும் ஸ்ரேயாவிடம் பணியாற்றுகிறார் விமல். ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் முட்டல் மோதல். ஆனாலும் தனது லண்டன் விஸாவைத் தக்கவைக்க, விமலைத் திருமணம் செய்ய ஒரு திட்டம் போடுகிறார் ஸ்ரேயா. “தஞ்சையில் இருக்கும் என் பெற்றோரைச் சந்தித்தால் உனக்கு உதவுகிறேன்” என்கிறார் விமல். அதை ஏற்று அவருடன் இந்தியா வருகிறார் ஸ்ரேயா. எதிரும் புதிருமாக இருந்த விமல், ஸ்ரேயா ஜோடி காதலில் விழுந்தார்களா? திருமணம் நடந்ததா? என்பதைக்க கொஞ்சம் காமெடி, கவர்ச்சி கலந்து கொடுத்திருக்கிறார்கள்.

லண்டன், தஞ்சை என இரண்டு இடங்களில் கதை நடக்கிறது. முதற்பாதி முழுக்க லண்டனில் ஸ்ரேயா ஆபீஸ், பார்ட்டி, பப், சண்டை என நகர்கிறது. அந்த சீன்களில் ஸ்ரேயா நடிப்பும் அழகும் ரசிக்க வைக்கின்றன. என்ன, லண்டன் செட்அப்புக்கு விமல் செட்டாகவில்லை. காமெடி என்ற பெயரில் சத்யனும் ஏதோ பேசிக்கொண்டே இருக்கிறார். அதேசமயம் தஞ்சைப் போர்ஷனில் விமல் ஃபிட் ஆகிறார். முதற்பாதியை விடப் பிற்பாதி ஓகே. விமலின் பெற்றோர்களாக வரும் பிரபு, உமா பத்மநாபன் நடிப்பு, பாட்டியாக வரும் கே.ஆர்.விஜயாவின் பாசம் படத்தைச் ரசிக்க வைக்கிறது. லண்டன் அழகை அழகாகக் காண்பித்திருக்கிறார் கேமராமேன் குருதேவ். அம்ரிஷ் பாடல்கள் பரவாயில்லை ரகம்.

சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் இரண்டு ஜோடிகள் கடைசியில் சேரும் வழக்கமான கதை. ஸ்ரேயாவின் காஸ்ட்யூம், அந்த ஸ்டைல், அவர் சம்பந்தப்பட்ட சில சீன்கள் ஓகே. ஆனால், விமல் – ஸ்ரேயா ஜோடியின் கெமிஸ்ட்ரி பெரிதாகச் செட்டாகவில்லை. காமெடியும் பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை.

பாரிஸ் கபே

டாக்டரான குரு சோமசுந்தரத்திடமிருந்து, சமூக ஆர்வலரான அவர் மனைவி அனுமோல் பிரிகிறார். அமெரிக்காவில் இருக்கும் அவர் மகள் அர்ச்சனா இதைக் கேள்விப்பட்டு இந்தியா வருகிறார். அப்பா, அம்மாவைச் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார். அவர்கள் பிரிவுக்கு என்ன காரணம்? மகளின் நோக்கம் நிறைவேறியதா? பாரிஸ் கபே-யில் குரு சோமசுந்தரம் பார்க்கும் ஒரு போட்டோவால் அவர் வாழ்க்கையில் என்ன மாற்றம் நடந்தது என்பதே சார்லஸ் சீலன் இயக்கிய ‘பாரிஸ் கபே’ படத்தின் கதைக்கரு.

கதையில் 3 காதல்கள் பற்றி விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. முதலாவது, கணவன்-மனைவியாக இருக்கும் குரு சோமசுந்தரம் – அனுமோல் இடையேயான காதல், பாசம். அடுத்து, அவர் மகளின் முற்போக்குக் காதல். அதற்கடுத்து கதையை நகர்த்தும் சாதி மாறித் திருமணம் செய்து ஆணவக் கொலை செய்யப்படும் சாய் – நயனா காதல். மூன்றையும் வெவ்வேறு கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். குரு சோமசுந்தரம், அனுமோலின் நடிப்பு, அந்த கேரக்டர்கள் பிரமாதம். ஆனால், ஒரு சில இடங்களில் குரு சோமசுந்தரம் நடிப்பில் நகைச்சுவைத் தன்மை அல்லது சினிமாதனம் வருவது மைனஸ். மகளாக வரும் அர்ச்சனா, அவர் காதலனாக வரும் விஜய் விஷ்வா ஜோடியின் செயல்பாடுகள் பரபர. காதலித்து சாதி காரணமாக உயிரை இழக்கும் கேரக்டரில் வரும் சாய் – நயனா சீன்கள் உருக வைக்கின்றன. ஆணவக் கொலைக்கு எதிரான கதை, அதை புதுக் கதைக்களத்தில் சொன்னது ஓகே. ஆனால், பல படங்களில் பார்த்த மாதிரியான சீன்கள் அந்த கொலைப் பின்னணியில் இருப்பது மைனஸ்.

போலீஸ், அரசியல்வாதிகள், சாதிக்கட்சித் தலைவர்களின் அட்டகாசம் போன்ற காட்சிகளை எத்தனையோ இயக்குநர்கள், எத்தனையோ கதைகளில் சொல்லிவிட்டார்கள். அதை மாற்றி யோசித்திருக்கலாம். வெளிநாட்டுக் கிராபிக்ஸ் காட்சிகளில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனாலும், பெண்ணியச் சிந்தனை, அநீதிக்கு எதிராகக் கொதிக்கும் ஒரு பெண்ணின் கோபம், மனசாட்சிக்குப் பயந்து அப்ரூவராக மாறும் டாக்டர், பெற்றோர்களின் மனநிலை, சமூக அவலம் எனப் பல விஷயங்களை உரக்கச் சொல்லியிருக்கிறது பாரிஸ் கபே. இன்னும் கொஞ்சம் வீரியமாகச் சொல்லியிருந்தால் முக்கியமான படமாக மாறியிருக்கும்.

தி டார்க் ஹெவன்

எஸ்.பாலாஜி இயக்கத்தில் சித்து, ரித்விகா, தர்ஷிகா, பிரதீப் உட்பட பலர் நடித்த சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த கதை. தென்காசி மாவட்டம் மேக்கரை என்கிற கிராமத்தில் 7 வருடங்களுக்கு ஒருமுறை, அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும் ஆண்கள் மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள். பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு இளம் பெண்ணின் சாபம்தான் இந்த மரணங்களுக்குக் காரணம் என ஊர் மக்களால் நம்பப்படுகிறது. அந்த ஊருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சித்து இந்தக்கொலைகள் பற்றி விசாரிக்கிறார். அவர் மனைவியும் மர்மமான முறையில் இறக்கிறார். இதற்குக் காரணம் சைக்கோ கொலையாளியா? அந்த வனதேவதையா? ‘தி டார்க் ஹெவன்’ புத்தக அமானுஷ்யமா? எனப் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது கதை.

அடுத்தடுத்து நடக்கும் கொலைகள்… அதைச் செய்தது யார்? என்ன காரணம்? கொலையாளியை ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார்? இந்த கோணத்தில் பல கதைகள் வந்திருந்தாலும், இதில் சொல்லப்படும் விஷயம், கொலை நடக்கும் விதம், கொலையாளியின் பின்னணி, அவரை நெருங்கும் ஹீரோ எனப் பல விஷயங்களைப் புதுமையாக, விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பாலாஜி. கொலைகளுக்கான பின்னணியை இரண்டாம் பாதியில் அவிழ்க்கும் விதம் அருமை. அதற்கான காரணமும் யாரும் ஊகிக்க முடியாதது. கதை நடக்கும் இடம், காலம், அந்தப் புத்தக மர்மம், வயலின், கிளைமாக்ஸ், திருப்பம், திரைக்கதை என நிறைய இடங்களில் நன்கு உழைத்திருக்கிறார் இயக்குநர். ஒருவித விறுவிறுப்புடன் படம் நகர்கிறது.

சின்னத்திரையில் ஸ்டாராக இருக்கும் சித்து, இந்தப் படத்தில் தனக்கான கேரக்டர் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். அவருடன் வரும் இன்னொரு போலீஸ்காரரான பிரதீப் நடிப்பும் நச். ரித்விகாவுக்கும் மாறுபட்ட வேடம். படத்தின் பெரிய பிளஸ் மணிகண்டனின் ஒளிப்பதிவு. இரவு நேரத்தில் அதிக காட்சிகள்; அதை பதைபதைப்புடன் காண்பித்திருக்கிறார். சக்தி பாலாஜியின் இசையும் இந்த வகை ஜானருக்கு வலுவூட்டியிருக்கிறது. சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும் திரில்லர் பிரியர்களுக்கு இந்த டார்க் ஹெவனைப் பிடிக்கும்.

பீப்

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரவு நேரத்தில் புரஃபஸர் எல்.சண்முகசுந்தர் வீட்டுக்குச் செல்லும் கால்கேர்ள் மாடியில் இருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் இறக்கிறாள். அது கொலை என ஹீரோ ராகவ், அவருடைய நண்பர்களும் நம்புகிறார்கள். அவளைக் கொலை செய்தது யார்? எப்படிச் செய்திருப்பார்கள்? அதற்கான காரணம் என்ன? என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். போலீஸும் பலரை விசாரிக்கிறது. அந்தக்கொலை எப்படி நடந்தது என்பதை விவரிக்கும் படம் பீப்.

எம்பிஏ மாணவரான ராகவ் ரங்கநாதனுக்கு கொஞ்சம் வித்தியாசமான பவர் உண்டு. ஒரு போட்டோவைப் பார்த்தால் அதற்குள் இருக்கும் பல உண்மைகளைக் கண்டுபிடிப்பார். தான் இறப்பதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பு சில போட்டோக்களைச் செல்போனில் எடுக்கிறாள் பாலியல் தொழிலாளியாக வரும் யாமினி. அதை வைத்துக்கொண்டு போலீஸுடன் போட்டி போட்டு விசாரித்து, பல ரிஸ்க் எடுத்து, கடைசியில் உண்மை குற்றவாளியை எப்படி நெருங்குகிறார் என்பதே கதை. அந்த கேரக்டருக்கு அவரும் செட்டாக இருக்கிறார். பாலியல் தொழிலாளியாக வரும் யாமினி, அவரை அழைத்து வரும் எல்.சண்முகசுந்தர் (இயக்குநர்), போலீஸ் அதிகாரி நிதிஷ் எனப் பலரும் நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

பெரும்பாலான கதை ஒரு அபார்ட்மெண்ட், போலீஸ் ஸ்டேஷனில் நடக்கிறது. ஒரு ஆங்கிளில் கொலையை விசாரிப்பது, பல கேள்விகள் கேட்பது புத்திசாலித்தனம். கடைசியில், கொலையாளியை பக்காவாக நெருங்கி, அவருக்கும் ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார் ஹீரோ. இவரா? அவரா? என்ற சந்தேகமும், நண்பர்கள் நடத்தும் சில மறைமுக ஆபரேஷன்களும் பரபர. புரஃபஸராக வரும் இயக்குநர் எல்.சண்முகசுந்தர் கேரக்டர், அவர் முகம் மனதில் நிற்கிறது.

சஸ்பென்ஸ் திரில்லர் என்பதால் பல கேரக்டர் தன்மை, திருப்பங்களை வெளியே சொல்ல முடியாது. ஆனாலும், படம் பார்க்கும் அனைவருக்கும் அந்த விசாரணைக்காட்சிகள் பிடிக்கும்; கொலையாளியை வெறுக்க வைக்கும். கிளைமாக்ஸ் கூட பக்கா. என்ன, சில காட்சிகளில் பேச்சைக் குறைத்திருக்கலாம்.

நல்ல படம்

சி.பிரபுராம் இயக்கத்தில் மதுப்பழக்கத்துக்கு எதிராக வந்திருக்கும் நல்ல படம் இது. ராஜபாளையத்தில் சொந்தமாக பார் நடத்தும் ஹீரோ ஹரீஷ், மதுப்பிரியர்கள் மறுமலர்ச்சிச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து அட்ராசிட்டி செய்கிறார். தன்னைப்போன்ற மதுப்பிரியர்களுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்கிறார். ஹீரோவை டாக்டருக்குப் படிக்கும் தனலட்சுமி காதலிக்கிறார். குடும்பத்தினர் எவ்வளவோ சொல்லியும் குடிகாரர்கள் திருந்த மறுக்கிறார்கள். திடீரென மதுவிலக்கு வர, அவர்கள் நல்லவர்களாக மாறுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் மீண்டும் மது சப்ளை தொடர, என்ன நடக்கிறது என்பதே கதை.

குடியால் ஏற்படும் பாதிப்புகளை, குடியால் அவர்களின் குடும்பம் சந்திக்கும் பண, மன ரீதியிலான பிரச்சினைகளை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதை முதற்பாதியில் comedy கலந்து சொல்லியிருப்பது புத்திசாலித்தனம். துறுதுறுவென நடித்திருக்கிறார் ஹீரோ ஹரீஷ். ஹீரோயினுக்கு நல்ல வேடம். பல குடிகாரர்களின் குடும்பம், அவர்கள் படும் பாடு, குடியால் ஏற்படும் அவமானம் போன்றவற்றை, பல நிஜச் சம்பவங்களின் அடிப்படையில் காண்பித்திருக்கிறார் இயக்குநர். ஹீரோவின் நண்பராக வரும் கல்கியின் காமெடி படத்தைச் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. இடைவேளைக்குப் பின் கதை வேறு திசைக்கு நகர்கிறது.

‘குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் ஆபத்து’ என்ற கருத்தைக் comedy கலந்து கமர்ஷியலாகச் சொன்ன இயக்குநரின் சமூக அக்கறையைப் பாராட்டலாம். படம் பார்க்கும் மதுப்பிரியர்கள் பல கருத்துகளை வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். சிலர் மனசு மாறினால் அது படத்தின் வெற்றி!

கோல்ட் கால்

தம்பிதுரை இயக்கத்தில் கன்னடம், தமிழில் வந்திருக்கும் படம். நான்கு நண்பர்கள் ஒரு நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அவர்களால் ஆர்டர் பிடிக்க முடியவில்லை. அவர்களும் நிறுவனத்தை ஏமாற்றி ஊர் சுற்றுகிறார்கள். அதனால், மேனேஜர் மற்றும் நிறுவன அதிகாரிகளால் அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு வேலை போகும் அபாயம் வருகிறது. அப்போது ஒரு சிறுவன் கடத்தப்படுவதைக் கண்டுபிடித்து, கடத்தல்காரர்களை போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை மாறியதா? விற்பனைப் பிரதிநிதிகளாக அவர்கள் வாழ்க்கையில் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதே கோல்ட் கால் படத்தின் கரு.

படம் முடியும்போது “இது அனைத்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கும் சமர்ப்பணம்” என இயக்குநர் கார்டு போடுகிறார்கள். அதற்கேற்ப அவர்களின் வாழ்க்கை, பிரஷர், நகைச்சுவை, பிரச்சினைகளைப் புதுக் கோணத்தில் சொல்கிறது கதை. நான்கு நண்பர்களாக வரும் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீவைஷ்ணவ் கிருஷ்ணா, விஜய் பாலாஜி ஸ்ரீகாந்த் ஆகியோர் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்வாக மிரட்டியிருக்கிறார்கள். அனைவரின் துடிப்பான, குறும்பான நடிப்பு ஃப்ரெஷ். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கலக்கியிருக்கிறார்கள். பாஸ் ஆக, மேனேஜராக வருபவரின் நடிப்பும், வில்லன் டீம் நடிப்பும் புதுசாக இருக்கிறது. பெண் கேரக்டர்களான நிஷா ஹெக்டே, மேரி லிட்டி, அமிதா ரங்கநாதா, கீர்த்தனா புல்கி ஆகியோரின் நடிப்பும் கூடுதல் பலம். விற்பனைப் பிரதிநிதிகள் பின்னணியில் இப்படி எந்தப் படமும் வந்ததில்லை. அதைக் கலர்ஃபுல்லாக, comedy கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். 4 மொழிகளைச் சேர்ந்த நடிகர்கள் நடித்திருப்பதால், படத்தில் நான்கு மொழி டயலாக்குகள் மாறி மாறி வருவதும் புதுமை. புதுமுகங்கள் நடித்திருப்பது மட்டுமே மைனஸ்.

– மீனாட்சிசுந்தரம், சிறப்புச் செய்தியாளர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.