“அண்டப் புளுகு என்பதை ஆதவ் அர்ஜுனா புளுகு என மாற்றிவிட்டார்களோ?” – திமுக வேட்பாளர் பரந்தாமன்

மாற்றம் என சொன்னவர்கள் அண்டப் புளுகு என்பதை ஆதவ் அர்ஜுனா புளுகு என மாற்றிவிட்டார்களோ? என பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், மதுராந்தகம் தொகுதி வேட்பாளருமான பரந்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாயை திறந்தாலே பொய் என்பதற்கு உதாரணமாக வாழும் அமைச்சரின் லேட்டஸ்ட் பொய். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை முதலமைச்சர் விஜய் இன்னும் எடுக்கவில்லையாம்.

ஏமாற்றி பழகிவிட்டோம் என்பதற்காக, எதை சொன்னாலும் நம்பி ஏமாந்து விடுவார்கள் என்று மக்களை ஏளனமாக நினைப்பதா ?

எந்த இடத்தில் தலைமைச் செயலகத்தைக் கட்டுவது என ஆராய ஒரு குழுவை அமைத்து, இந்த இந்த இடங்களை ஆராய்ந்து சொல்லுங்கள் என இடம் தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருந்தால், முதலமைச்சர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது.

ஆனால், இடத்தை முடிவு செய்து, இத்தனை லட்சம் சதுர அடியில் கட்டடம் கட்டுகிறோம் அதில், வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் எவ்வளவு, வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான அரசு நிலம் எவ்வளவு என்பது வரைக்கும் விரிவாக 25.55 ஏக்கர் நிலத்தில், பட்டினப்பாக்கத்தில், ஃபோர்ஷோர் எஸ்டேட்டில், 1,200 கோடியில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று ‘in-principle approval’ கொடுத்த ஓர் அரசாணை வெளியாகியுள்ளது.

இப்படி ஓர் ஆணை முதலமைச்சருக்கு தெரியாமல் எப்படி வர முடியும்? அல்லது முதலமைச்சரை டம்மியாக வைத்துக் கொண்டு தலைமைச் செயலகத்தைக் கட்டும் பணிகளை மேற்கொள்ளும் சக்தி எது?

எல்லா தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்கள் வயிற்றில் அடித்து தலைமைச் செயலகம் கட்ட முதல்வருக்கு கூட தெரியாம அறிவிக்கும் அதிகாரம் உள்ள “Super CMs”யார்?

பொய் சொல்லி, மடை மாற்றி மக்களை ஏமாற்றும் போக்கை தவெக நிறுத்திக்கொள்ள வேண்டும். நேர்மையாக மக்களை எதிர்கொண்டு பதில் சொல்ல வேண்டும்.

மீனவர்கள் நலனும், வாழ்வாதாரமும் பாதிக்கும் எனில் கழகம் அவர்களுக்கு எந்த எல்லைக்கும் சென்று துணை நிற்கும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.