திடீரென மாயமான இளைஞர் பற்றிய விசாரணையில், ஒற்றைச் செருப்பு போலீ சாருக்கு உதவி இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ளது பவ்தன். இந்தப் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கடந்த மாதம் திடீரென மாயமானார். மகனை காணவில்லை என்று அவர் தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் வாசலில் ஒற்றைச் செருப்பு கிடந்தது.
அது தனது மகனின் செருப்புதான் என்று சொன்னார் அவர் தாய். இதனால், செருப்பு கிடந்த வீட்டில் இருந்தே போலீசார் விசாரணையை தொடங்கினர். அந்த வீட்டில் விசாரித்தபோது, அது யாரு செருப்புன்னே தெரியலை என்று முதலில் கூறினர். பிறகு முன்னுக்குப் பின் முரணாக பதில் வந்தது. முறையான விசாரணைக்குப் பிறகு வெளிவந்தது, திக் திடுக் தகவல்கள்.
அந்த வீட்டில் இருந்த பெண்ணுக்கும் காணாமல் போன இளைஞருக்கும் பழக்கம் இருந்துள் ளது. இந்தப் பழக்கம் தவறான உறவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. இது அந்தப் பெண்ணின் கணவருக்குத் தெரியவர மனைவியை கண்டித்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று இரவு, இரண்டு முறை அந்தப் பெண்ணுக்கு போன் செய்திருக்கிறார் இளைஞர். அவர் எடுக்கவில்லை. இருந்தும் அந்த இளைஞர், அவர் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியிருக்கிறார். அப்போது வீட்டில் இருந்த அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவர் நண்பர்கள் இருவரும் சேர்ந்து, இளைஞரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார். பின்னர் இளைஞர் உடலை குடோனுக்கு கொண்டு சென்று எரித்துள் ளனர். பிறகு அவர் சாம்பலை எடுத்து பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









