முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா தனது புதிய எலிவேட் எஸ்யுவி வகை காரின் டீசரை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முன்னணி கார் நிறுவனங்கள் புதுப்புது வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என மேம்படுத்தப்பட்ட நடுநிலை எஸ்யுவி கார் மாடல்களை சந்தைகளில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஹோண்டா நிறுவனம் ”எலிவேட்” என்ற மிட்-சைஸ் எஸ்யுவி காரை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியாவில் கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி சுசுகி கிராண்டு விட்டாரா ஆகிய எஸ்யுவி கார் மாடல்கள் தற்போதைய நடுநிலை எஸ்யுவி கார் மாடல்கள். இந்த கார்களுக்கு போட்டியாக ஹோண்டா எலிவேட் வகை கார்கள் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ஹோண்டா நிறுவனம் இந்த காரின் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் மூலம் காரில் உள்ள சிறப்பு அம்சங்களை ஹோண்டா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
எலிவேட் காரின் போட்டியாளர்களான கிரெட்டா மற்றும் கிராண்ட் விட்டாராவில் பனோரமிக் சன்ரூஃப் பொருத்தப்பட்டிருக்கும். இந்த வகை சன்ரூஃப், காரின் மேல் கூரை முழுவதும் பரவியிருக்கும். ஆனால் எலிவேட் காரின் சன்ரூஃப் கச்சிதமானதாகவும் மற்றும் முன் இருக்கைகளுக்கு மேலே மட்டும் இருக்கக்கூடியதாகவும் உள்ளது.
மேலும் ஹோண்டா எலிவேட் கார் எல்இடி ஹெட்லேம்ப்கள், 17 இன்ச் அலாய் சக்கரங்கள் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். உட்கட்டமைப்பை பொருத்தவரை தொடுதிரை, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் காற்றோட்டமான இருக்கைகள் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
விலையைப் பொறுத்தவரை, ஹூண்டாய் க்ரெட்டா ரூ.10.87 லட்சம் முதல் ரூ.19.20 லட்சம், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ரூ.10.70 லட்சம் முதல் ரூ.19.95 லட்சம், மற்றும் கியா செல்டோஸ் ரூ.10.89 லட்சம் முதல் ரூ. ரூ.19.65 லட்சம் என விற்பனையில் உள்ள நிலையில், இவற்றின் போட்டியாளரான ஹோண்டா எலிவேட் இந்தியாவில் சுமார் ரூ.10.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த எலிவேட் கார்கள் உலக அளவில் ஜூன் 6-ம் தேதி விற்பனைக்கு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.







