சாதி கடந்து சாதித்த ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஹாக்கி பெருமையை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மீண்டும் நிலைநாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலோ அவர்களை சாதிரீதியாக இழிவுபடுத்தும் மோசமான செயல் நடந்துள்ளது. இந்திய பெண்கள் ஹாக்கி…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஹாக்கி பெருமையை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மீண்டும் நிலைநாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலோ அவர்களை சாதிரீதியாக இழிவுபடுத்தும் மோசமான செயல் நடந்துள்ளது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை வந்தனா கட்டாரியா, அணியின் முன்களத்தில் எதிரணியை கதிகலங்க வைக்கும் ஆட்டத்தை ஆடுபவர். மிட்ஃபீல்டில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் துல்லிக்குதித்து முன்னோக்கி வந்து எதிரணி தடுப்பட்டக்காரர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு கோல் அடிப்பதில் வல்லவர். இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், சர்வதேச அளவில் சிறந்த வீராங்கனையாகவும் திகழ்கிறார் வந்தனா கட்டாரியா.

இந்த ஒலிம்பிக்கிலும் லீக் சுற்றோடு இந்தியா வெளியேற வேண்டியது தான் என்ற நிலையே இருந்தது. முதல் மூன்று போட்டியிலும் தோற்றிருந்தது. இந்த சூழலில் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் வென்றால் தான் இந்தியா அடுத்த சுற்றிற்கு முன்னேற முடியும் என்ற நிலைமையில் இந்திய அணிக்காக ஹாட்ரிக் கோல் அடித்து இந்தியாவை வெற்றிபெறச் செய்து காலிறுதிக்கும் அழைத்துச் சென்றார் வந்தனா கட்டரியா.

ஒலிம்பிக்ஸில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் மற்றும் ஒரே இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா தான். அவரால் தான் இந்தியா காலிறுதிச் சுற்றுக்குத் முன்னேறியது. காலிறுதியிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். வலிமையான அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்தது. அரையிறுதியில் இந்தியா தோற்றவுடன் எல்லோருக்கும் வருத்தம் இருந்திருக்கும் ஆனால் வந்தனாவின் கிராமத்தில் இருந்த சிலருக்கு அது மகிழ்வானதாக இருந்துள்ளது.

அணியினருடன் வந்தனா கட்டாரியா

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள ரோஷனாபாதில் வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு வந்து நின்ற சிலர் நடனமாடி, கிண்டல் செய்து, பட்டாசுகளை வெடித்து கொண்டாடியுள்ளனர். இந்திய அணி தோற்றதற்கு வந்தனாவை போன்ற தலித் வீராங்கணைகள் அணியில் இருந்ததுதான் காரணம் எனவும் கூறி திட்டிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து வந்தனா கட்டாரியாவின் சகோதரர் போலீஸாரிடம் புகார் செய்துள்ளார். அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தெரிவித்துள்ள வந்தனா கட்டாரியா, எது நடந்ததோ அது நடந்திருக்க கூடாது. நாங்கள் நாட்டுக்காக விளையாடுகிறோம், நாங்கள் அனைவரும் ஒன்றே, எல்லா வகையிலும் என்று தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு பிறகும் இங்கிலாந்திற்கு எதிரான வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார்.

இந்திய அணி தோற்றதற்கு, தன் சொந்த ஊர்காரர்களே, கொண்டாடி மகிழ்ந்த போதும், தன்னை சாதி ரீதியில் இழிவு செய்த போதும், அந்த கொடுமைகளை எல்லாம் கடந்து இந்தியாவிற்காக ஒலிம்பிக்ஸ் களத்தில் போராடி கோல் அடிக்க முடிகிறதென்றால் வந்தனா கட்டாரியா அந்த ஒலிம்பிக் தங்கத்தையும் விட உயர்ந்தவர் தானே! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கும் வந்தனா கட்டாரியா நம்பிக்கையாகவும், தைரியமாகவும் இருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.