தங்க மகன் நீரஜ் சோப்ரா கடந்து வந்த பாதை

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்றுகொடுத்த தங்க மகன் நீரஜ் சோப்ரா கடந்து வந்த பாதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.   டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதே பெரும்பாலான…

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்றுகொடுத்த தங்க மகன் நீரஜ் சோப்ரா கடந்து வந்த பாதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதே பெரும்பாலான இந்தியர்களின் எண்ணமாக இருந்திருக்கும். மேரிகோம் போன்ற அனுபவமிக்க வீரர்கள் பதக்கமின்றியும், கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து, இந்த முறை வெண்கலத்துடனும் தாயகம் திரும்பியதே அதற்கு காரணமாக இருந்திருக்கும். ஆனால், இந்தியர்களின் தங்கப் பதக்க தாகத்தை தீர்த்து வைத்திருக்கிறார் 23 வயதே ஆன இளங்கன்று நீரஜ் சோப்ரா.

ஹரியானா மாநிலம் பானிபட்டில் 1997ஆம் ஆண்டு பிறந்தவர் நீரஜ் சோப்ரா. சிறு வயது முதலே தடகள உலகத்தில் தடம்பதிக்க வேண்டும் என்பதையே கனவாக கொண்டு, ஈட்டி எறிதலில் பயிற்சி பெற்றுவந்தார். தன்னம்பிக்கை மிகுந்த நீரஜ் சோப்ராவை தடகள உலகம் திரும்பிப் பார்த்த ஆண்டு 2016. இந்த ஆண்டில் நடைபெற்ற சவுத் ஏசியன் கேம்சில் பங்கேற்று தங்கம் பதக்கம் வென்றபோது அவருக்கு வயது 18 தான்.

அத்தோடு பதக்க வேட்டையை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. அதே ஆண்டில் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கமும், ஜூனியர் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமல்வெல்த் மற்றும் ஏசியன் கேம்ஸ் போட்டியில் தங்கம் வென்று உலக அரங்கில் தவிர்க்க முடியாத தடகள வீரராக உருவெடுத்தார் நீரஜ் சோப்ரா. ஏசியன் கேம்சில் 88 புள்ளி பூஜ்ஜியம் 6 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த இவரது சாதனையை தற்போது வரை எந்த இந்தியரும் முறியடிக்கவில்லை.

இந்நிலையில் தான், டோக்கியோ ஒலிம்பிற்கு தகுதிபெற்றார் அவர். இறுதி போட்டிக்கான தகுதிச் சுற்றில் 86 புள்ளி ஆறு ஐந்து மீட்டர் தூரம் காற்றை கிழித்துக் கொண்டு சீறிப் பாய்ந்த நீரஜ் சோப்ராவின் ஈட்டி, அவரை இறுதிச் சுற்றுக்கு கொண்டு சேர்த்தது. 12 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார் நீரஜ் சோப்ரா. ஒரு வீரருக்கு 6 முறை ஈட்டி எறிய வாய்ப்புகள் வழங்கப்படும் நிலையில், இரண்டாம் வாய்ப்பில் அவர் எறிந்த ஈட்டி 87 மீட்டர் ஐந்து எட்டு மீட்டர் சீறிப் பாய்ந்தது. இந்த சாதனையை மீதமிருந்த 11 வீரர்களாலும் கடைசி சுற்றுவரை முறியடிக்க முடியாததால், தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் நீரஜ் சோப்ரா.

2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். அதன்பிறகு, தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

தற்போது, ராணுவத்தில் சுபேந்தராக பணியாற்றிவரும் அவரது வெற்றியை, தேசிய கொடியை கையில் ஏந்தியபடி ராணுவ வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவரது சொந்த ஊரான பானிபட்டும் திருவிழாக்கோலம் பூண்டது. ஹரியானாவை சேர்ந்த வீரர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 6 கோடி ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்திருந்தார். தற்போது, நீராஜ் சோப்ராவிற்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை உறுதியாகியுள்ளது.

நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனுபவமிக்க வீரர்களே ஏமாற்றம் அளித்த இந்த ஒலிம்பிக் போட்டியில், தங்கப் பதக்கத்தை உச்சி முகர்த்து, இளம்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கு ஆகச்சிறந்த உதாரணமாகியிருக்கிறார் நீரஜ் சோப்ரா.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.