மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு 2 நாட்களில் 13,247 பேர் பயனடைந்துள்ளாதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில், 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை மையம் புதுப்பிக்கப்பட்டது. மேலும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களும் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உலக அளவில் சிறப்பான திட்டம் எனக் கூறினார். இத்திட்டம் தொடங்கப்பட்டு 2 நாட்களில் 13,247 பேர் பயனடைந்துள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் 1 கோடி பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.








