இந்தி பேசும் மாநிலங்களில் எல்லாம் தனது கட்சி ஆட்சி அமைக்கும்: ராகுல் காந்தி பெருமிதம்

தென் மாநிலங்களை விட, வடமாநிலங்களில் பொது மக்கள் மத்தியில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் எல்லாம் தனது கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல்…

தென் மாநிலங்களை விட, வடமாநிலங்களில் பொது மக்கள் மத்தியில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் எல்லாம் தனது கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த பாத யாத்திரை பயணமானது, காஷ்மீரில் முடிவடைய உள்ளது. 150 நாட்கள் , 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் தூரம் என கணக்கிடப்பட்டுள்ள இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது ஹரியானாவை சென்றடைந்துள்ளது.

இந்நிலையில் குருக்ஷேத்ரா அருகே செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி,

பயம், வெறுப்பு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிரானது தான் இந்த பாரத் ஜோடோ யாத்ரா.இந்த யாத்திரைக்கு எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பு கிடைத்ததுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் யாத்திரைக்கு மக்களிடம் இருந்து பெரிதாக வரவேற்பு இருக்காது என்று சிலர் கூறினார்கள். ஆனால் அதற்கு மாறாக, இந்த மாநிலங்களில் எல்லாம் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நடை பயணத்தை தென் மாநிலங்களில் முதலில் தொடங்கிய போது பலரும் நெகடிவ்வான விமர்சனங்களையும், கருத்துக்களையும் வைத்தார்கள். ஆனால் தென் மாநில மக்கள் அதற்கு நேர் எதிராக நல்ல வரவேற்பை எனது யாத்திரையின் போது அளித்தனர். தற்போது தென் மாநிலங்களை காட்டிலும், வட மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அமோகமாக வரவேற்பு கிடைத்துள்ளது . இந்தி மொழி அதிகம் பேசப்படும் இந்த மாநிலங்களில் எல்லாம் நிச்சயம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். எனது “இமேஜைப் பற்றி நான் கவலைப்படவில்லை”.

 

பாஜக அரசை கடுமையாக தாக்கிய வயநாடு எம்.பி., “நாட்டு மக்கள் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, வெறுப்புணர்வை பரப்புகின்றனர். காங்கிரஸ் எப்போதாவது இதைச் செய்ததா?. “எரிபொருள் விலை, ஏற்றுமதி கொள்கை, காப்பீட்டு விலை மற்றும் உரங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டில் அனைத்து தரப்பிலிருந்தும் விவசாயிகள் தாக்கப்படுகின்றனர்.

“நாங்கள் எங்கள் நாட்டை நேசிக்கிறோம். எங்கள் மக்கள், விவசாயிகள், ஏழைகளை நேசிக்கிறோம், அவர்களுடன் நடக்க விரும்புகிறோம். எனவே, நாட்டின் உண்மையான குரலை இந்த நாட்டு மக்கள் கேட்க வேண்டும் என்பதே யாத்ராவின் நோக்கம்

இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மேலும் பகவத் கீதையை சுட்டிக்காட்டி பேசிய ராகுல் காந்தி, “உங்கள் வேலையைச் செய்யுங்கள், முடிவைப் பற்றி கவலைப்பட வேண்டாம்’ என்று கீதையில் கூறப்பட்டுள்ளது. அர்ஜுனன் மீனின் கண்ணைக் குறிவைத்தபோதும், குறி வைத்த பிறகும் ​​அவர் என்ன செய்வார் என்று சொல்லவில்லை. அதை மனதில் வைத்துதான் தன் பயணமும் தொடர்வதாக கூறினார்.

முன்னதாக, ஹரியானாவின் கர்னல் பகுதியில் கடுமையான குளிர் நிலவி வரும் சூழலில், பனிமூட்டத்திற்கு நடுவே பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி ராகுல் காந்தி குளிரைத் தாங்கும் உடைகளை அணியாமல், தனது இயல்பான உடைகளிலேயே நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் ஆதவாளர்கள் சிலர் மேல் சட்டையின்றி, தலையில் டர்பன் அணிந்தவாறு நடனமாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.