ஒவ்வொரு முறையும் சிறந்த டி20 போட்டியை இதுவரை பார்த்ததில்லை என்று நான் நினைத்துக் கொள்வேன். ஆனால் சூர்ய குமார் யாதவ் இம்முறை அதை விட மிகச் சிறந்த போட்டியை காண்பித்து விட்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. கடந்த இரண்டு போட்டிகளில் தலா ஒவ்வொரு அணியும் வெற்றி பெற்ற நிலையில் தொடரை யார் கைப்பற்ற போவது என்ற பரபரப்பில் கடைசி டி20 போட்டி நேற்று தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராஜ்கோட்டில் நடைபெற்ற இப்போட்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி மைதானத்தின் நாலாப்புறமும் சிக்சர்களை பறக்கவிட்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 45 பந்தில் சதம் அடித்தார். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து தொல்வியை தழுவியது.நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கும் தொடர் நாயகன் விருது அக்சர் படேலுக்கும் வழங்கப்பட்டது.
இதனிடையே போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டும், ஆட்டநாயகன் விருது பெற்ற சூர்யகுமார் யாதவும் மைதானத்தில் பேசிக் கொள்ளும் ”ஃப்ரீ டாக்” எனும் உரையாடலின் காணொளியை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ராகுல் ட்ராவிட் பேசும் போது “என்னோடு இங்கே நிற்கும் இந்த நபர், நிச்சயமாக சிறு வயதில் என்னுடைய ஆட்டத்தை பார்த்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் சிறந்த டி20 போட்டியை இதுவரை நான் பார்த்ததில்லை என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் சூர்ய குமார் யாதவ் இம்முறை அதை விட மிகச் சிறந்த போட்டியை எனக்கு காண்பித்து விட்டார் ” என ராகுல் டிராவிட் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
ராகுல் மற்றும் சூர்யகுமாரின் இந்த உரையாடல் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.