இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்த அரசின் மேல் முறையீட்டு வழக்கைத் திங்கட்கிழமை விசாரிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்த அரசின் மேல் முறையீட்டு வழக்கைத் திங்கட்கிழமை விசாரிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களைக் குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடவடிக்கையை விரைவுபடுத்தக் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை உதவி ஆணையர் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து உதவி ஆணையர் வருத்தம் தெரிவிக்காத நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றைத் தகர்த்து முன்னேறுங்கள்’ – முதலமைச்சர்’

அபராதம் விதித்துத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், தமிழக அரசுத்தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ்சந்திரா அமர்வில் முறையிட்டார். முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், அரசின் மேல் முறையீட்டு வழக்கைத் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.