இந்திய இளைஞர்களின் திறமையை உலகமே எதிர்பார்க்கிறது- பிரதமர் மோடி

இந்திய இளைஞர்களின் திறமையை உலகமே எதிர்பார்ப்பதாக அண்ணாபல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.  அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

இந்திய இளைஞர்களின் திறமையை உலகமே எதிர்பார்ப்பதாக அண்ணாபல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். பல்வேறு பாடப்பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்ற 69 மாணவ மாணவியருக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமை உரை ஆற்றிய பிரதமர் மோடி, மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு அவர்களின் பெற்றோர்கள் செய்த தியாகங்களும் முக்கிய காரணம் என்றார். ஆசிரியர்கள் நாட்டின் தலைவர்களை உருவாக்குவதாகவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். நாட்டை வளமாக்க இளைஞர்கள் மீது தாம் நம்பிக்கை வைத்துள்ளதாக சுவாமி விவேகானந்தர் கூறியதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தற்போது இந்திய இளைஞர்களின் திறமையை உலகமே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அண்ணாபல்கலைக்கழகத்தின் மேம்பாட்டிற்காகவும், இளைஞர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் மேற்கொண்ட பணிகளையும் பிரதமர் மோடி தமது உரையில் நினைவு கூர்ந்தார்.

உலகம் தற்போது நிலையற்ற தன்மைகளின் காலத்தில் இருப்பதாக கூறப்படும் கூற்றுக்களை மறுத்த பிரதமர் மோடி, இது சிறந்த வாய்ப்புகளுக்கான காலம் என்றே தான் கருதுவதாகக் கூறினார். இந்த சிறப்பான தருணத்தில் மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கை மாறிவரும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப சிறந்த முடிவுகளை எடுக்கும் வகையில் முழுமையான சுதந்திரத்தை இளைஞர்களுக்கு வழங்குவதாகவும் பிரதமர் மோடி கூறினார். புதிய வளரும் தொழில் நிறுவனங்கள் கடந்த 6 ஆண்டுகளில் பெருமளவு வளர்ந்திருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, பல்வேறு துறைகளில் இந்தியா புதிய வாழ்க்கையை தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.