இந்தி மொழி விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.
இந்தி மொழி விஷயத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை மறைமுகமாக அமைச்சர் ஒப்புக்கொண்டார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், சட்டப்பேரவை விதி என் 110 -ன் கீழ் வெளியிடப்படும் அறிக்கைகளை இந்தியில் மொழி பெயர்த்து அதனை தமிழ்நாடு அரசின் இணையதளத்திலேயே வெளியிடுகிறது திமுக அரசு என குற்றம்சாட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், மொழிப் பிரச்சனையில் வழக்கம் போல அதிமுக மேற்கொள்ளும் இரட்டை வேடம் இப்போது வெட்ட வெளிச்சமாக மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு விட்டதும், ஓ.பன்னீர் செல்வம் திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்தி மொழிக்கு அதிமுக பட்டுக் கம்பளம் விரித்த வரலாறுகளை எல்லாம் மூடி மறைக்க முயற்சித்திருக்கின்றார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
திருக்கோவில்களைத் திமுக அரசு இடிக்கின்றது என்ற பச்சைப் பொய்யை பரப்ப முற்பட்டு அறிக்கை வெளியிட்டு இருப்பது விரக்தியின் வெளிப்பாடாகும் என்ற தங்கம் தென்னரசு, மதுரையில் தமிழன்னைக்கு 100 கோடி ரூபாயில் சிலை வைப்போம் எனக் கூறிவிட்டு ஒரு ரூபாய் நிதி கூட ஒதுக்காமல் திட்டத்தை கைவிட்டது அதிமுக அரசு என்று விமர்சித்துள்ளார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலேயே இந்தி மொழி கற்றுத்தரப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்ட அதிமுக அரசில் தான் ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் அமைச்சராக இடம் பெற்றிருந்தார் என்பதை மறுக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், செம்மொழி என்ற சொல்லைக்கூட பத்தாண்டு கால தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்புகளில் இடம் பெறாது பார்த்துக்கொண்ட அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கான சாதனைகள் என பட்டியல் போட முனைந்திருப்பதுதான் வேடிக்கையானது; வேதனையானதும் கூட என்றும் குறிப்பிட்டுள்ளார்.







