நடவடிக்கை வேண்டும்: டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கடிதம்

ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் பாதுகாப்பு அதிகாரி தமிழக டிஜிபியிடம் வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் ஆதினத்திற்கு புறப்பட்டு சென்றபோது ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு…

ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் பாதுகாப்பு அதிகாரி தமிழக டிஜிபியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் ஆதினத்திற்கு புறப்பட்டு சென்றபோது ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மன்னம்பந்தல் பகுதியில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரின் வாகனம் செல்லும் சாலையின் முன் திரண்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் கொடிகளையும் பதாதைகளையும் வீசி எறிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்று காவல்துறை விளக்கம் அளித்தது. இந்த நிலையில் இதுதொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஷ்வேஷ் சாஸ்த்ரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டதாகக் கூறியுள்ளார். அதிர்ஷ்டவசமாக ஆளுநருக்கோ, அவரின் வாகனத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஸ்வேஷ் சாஸ்த்ரி வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.