“இந்தி- இந்தியாவின் இணைப்பு மொழி ஆக முடியாது! – அமைச்சர் வன்னி அரசு

எத்தனை வடிவம் மாறி இந்தி திணிக்க முயற்சித்தாலும் தமிழ்நாடு ஏமாறாது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தி தினத்தையொட்டி மும்பையில் நேற்று (14.09.26) நடைபெற்ற இந்திய அலுவல் மொழி மாநாட்டில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பாலமாக இந்தி மொழி உள்ளது. அலுவல் மொழியான இந்தி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மொழிகளுடனும் தொடர்புடையது. நாடு முழுவதும் பணியாற்றுவதற்கான ஒரு மகத்தான வாய்ப்பை இந்த அலுவல் மொழி எனக்கு வழங்கியுள்ளது” என்று பெருமை பேசியுள்ளார்.

மேலும், “இந்திய கலாச்சாரம் என்பது நூறு இதழ்கள் கொண்ட தாமரை போன்றது. தத்தம் மாகாணங்களில் ராணி போல மாகாண மொழிகள் விளங்கட்டும். அனைத்து மொழிகளுக்கும் மைய ஆபரணமாக விளங்கும் இந்தி மொழி, இந்த நூறு இதழ்கள் கொண்ட தாமரையை மேலும் அழகுபடுத்தட்டும்” என்று வங்காள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சொன்னதாக அமித்ஷா தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஒன்றியமே இந்திக்கான ஒன்றியம் என்பது போல, அமித்ஷாவின் பேச்சு அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள தேசிய இனங்களையும், அவர்களது மொழி, பயன்பாட்டு உரிமைகளை, வரலாற்றை புறந்தள்ளும்
திரபுவாத பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது.

‘இந்தியாவுக்கு தேசிய மொழி (National Language) எதுவும் இல்லை. ஆங்கிலம் மற்றும் இந்தி என இரண்டு அலுவல் மொழிகள் (Offical Language) மட்டுமே உண்டு. அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது’ என்று பள்ளிக்கூட பாடங்களில் நமது குழந்தைகள் படிப்பதை இவர்களுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.

அரசியலமைப்பு அங்கீகரித்துள்ள 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும், அந்தந்த மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியே வழக்காடு மொழியாக, வழிபாட்டு மொழியாக, வணிகத்துக்கான மொழியாக இருக்க வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு.

அதனடிப்படையில் தான், ‘சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும்’ என்று கடந்த செப். 3 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த அரசு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாகாண மொழி, மாநில மொழி என்று தேசிய இனங்களின் மொழியை சிறுமைப்படுத்துவதால், இந்தி மொழிக்கு இதுவரை இல்லாத சிறப்புகள் எதுவும் புதிதாக வரப்போவதில்லை.

நேற்றைய உரையில் இந்தி மொழிக்கான ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ அகராதி குறித்து பேசிய அமித்ஷா, வெறும் 51 ஆயிரம் சொற்களை கொண்டிருந்த இந்தி அகராதி, இப்போது 8 லட்சம் சொற்களை கொண்டிருக்கிறது. அதில் 50 ஆயிரம் சொற்கள் பிறமொழியிலிருந்து சேர்க்கப்பட்டது என்றார்.

இந்த இந்தி மொழியை, தனித்த அடையாளமும், தனித்து இயங்கும் பண்பும், தனி வரலாறும், எந்த கடனோ, இடைச்செருகலோ இல்லாமல் உயிர்ப்புடன் உள்ள தமிழ் மொழியோடு ஒப்பிட்டு பேசுவது அறிவான செயலாக கருத முடியாது.

நாட்டின் செம்மொழிகள் மேம்பாட்டுக்காக ஒன்றிய பாஜக அரசு ஒதுக்கியுள்ள நிதி குறித்த தரவுகளை பார்த்தால், 2014-15 முதல் 2024-25 ஆண்டு வரை, மொத்தம் ரூ.2532.59 கோடியை வெறும் 24 ஆயிரம் பேர் மட்டுமே பயன்படுத்தும் (2011 கணக்கெடுப்பின்படி) செத்த மொழியான சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு செலவிடப்படுள்ளது.

ஆனால் நாட்டின் 21.99% மக்கள் பேசும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய 5 செம்மொழிகளுக்கும் சேர்த்து ரூ.147.56 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தி, உருது, சிந்தி ஆகிய மூன்று வடஇந்திய மொழிகளுக்கு ரூ.1,317.96 கோடி தனியே தரப்பட்டுள்ளது.

இது தான் தேசபக்தி, தேச ஒற்றுமை என்ற இவர்களின் போலி வேடத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே அரசு, ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்ற ஆதிக்க பாசிச சித்தாந்தம்.

“இந்தியைப் பரப்புவதற்கு வகைசெய்யும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 344 (ஆட்சி மொழி ஆணையம் மற்றும் நாடாளுமன்றக் குழு) நீக்கப்பட வேண்டும்”

“அரசமைப்புச் சட்டப் பிரிவு 351, இந்தியை மட்டும் வளர்ப்பதற்குப் பதிலாக, இந்தியாவின் அனைத்து மொழிகளையும் பாதுகாக்க, வளர்க்க, புத்துயிர் அளிக்க உதவும் வகையில் திருத்தப்பட வேண்டும்” என்ற விடுதலைச் சிறுத்தைகளின் மொழியுரிமை கோரிக்கைகள் வென்றால் தான், ஒன்றிய அரசின் மொழிகளுக்கான நிதி பாகுபாடு முடிவு வரும்.

தமிழ்த்தேசிய இனம் ஒருபோதும் இந்தி ஆதிக்கத்தையோ அல்லது சுரண்டலையோ ஏற்காது. எத்தனை வடிவம் மாறி இந்தி திணிக்க முயற்சித்தாலும் தமிழ்நாடு ஏமாறாது என எச்சரிக்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.