தமிழ் மீது இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுடன் “தமிழ்நாடு தர்ஷன்” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏழு நாள் சுற்றுப்பயணமாக பனாரஸ் பல்கலைக்கழகத்திலிருந்து 18 மாணவ, மாணவிகள் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் தமிழ்நாடு வந்துள்ள நிலையில் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – ஏப்.17 ஆம் தேதி மத்திய அரசு பரிசீலனை
இதில் பேசிய ஆளுநர் ரவி, இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது என்றார். இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது என்று தெரிவித்த ஆளுநர் ரவி, சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்று குறிப்பிட்டார்.
தமிழ் அல்லாத பிறமொழி பேசுபவர்கள் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நினைப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும், தமிழை ஆழமாக படிக்க வேண்டும் என்றும், தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும் என்றும் மாணவர்களிடம் தெரிவித்தார். மேலும் தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று கூறிய ஆளுநர், 2047ஆம் ஆண்டு உலகத்துக்கு தலைமை ஏற்கும் நாடாக இந்தியா விளங்கும் என்ற கூறினார்.







