பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயனடைந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டரில் உணர்ச்சிப்பூர்வமாகவும், அதேநேரத்தில் பெருமையாகவும் பகிர்ந்துள்ள நிகழ்வு தற்போது சமூகவலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி.ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரனான சி.ஆர். கேசவன் அவர்களும் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 23-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்த அவர், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி கட்சியில் இருந்து விலகினார்.
பின்னர் பாஜகவில் இணைய முடிவு செய்து கடந்த 8-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த அவர், நேற்று பிரதமர் மோடியையும் சந்தித்தார். அப்போது சி.ஆர். கேசவன் தனது வீட்டில் பணியாற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற பெண் எழுதிய கடிதத்தை பிரதமர் மோடியிடம்
வழங்கினார். இந்த கடிதம் தமிழில் எழுதப்பட்டிருந்ததோடு, அந்த கடிதத்தில் சுப்புலட்சுமி மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தானும் பயனடைந்துள்ளதாக தெரிவித்து, எந்த அளவிற்கு இந்த திட்டம் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தது என்பதை நெகிழ்ச்சியாக எழுதி இருந்தார்.
குறிப்பாக அதில், இந்த வீடு எங்கள் தலைமுறையின் முதல் சிமெண்ட் கட்டட வீடு எனவும், இதன்மூலம் எங்களுக்கு சமூதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைத்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருந்ததோடு, இவற்றுக்கு காரணம் தங்களின் தலைமையில் நடைபெறும் ஆட்சி முறையும், தங்களின் திட்டங்களும் தான். மேலும் என் குடும்பத்தினர் சார்பாகவும், இந்த திட்டத்தில் பயனடைந்த மக்களின் சார்பாகவும் உங்களின் ஆட்சியும், திட்டங்களும் மீண்டும் மீண்டும் வளர்ச்சி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என உணர்வுபூர்வமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த பிரதமர் மோடி, அதில் “இன்று நான் சி.ஆர் கேசவனை சந்தித்தேன், அவர் தனது வீட்டில் சமையற்காரராகப் பணிபுரியும் சுப்புலட்சுமியின் கடிதத்தை என்னிடம் பகிர்ந்துள்ளார். மதுரையைச் சேர்ந்த அந்த பெண் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு பெற விண்ணப்பம் செய்து பயனடைந்துள்ளார். அந்த திட்டம் அவரின் வாழ்க்கைக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. மேலும் இந்த திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் முன்னணியில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1646143025154777089?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









