கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து கரூர் குளித்தலை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குளித்தலை நகர கிளை சார்பாக கர்நாடகாவில் அரசு கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும், பாரதிய ஜனதா கட்சி அரசையும் கண்டித்து கிளைத் தலைவர் முகமது ஹனீபா தலைமையில் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் அவர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து மாநில துணை பொதுச்செயலாளர் முஜிபுர் ரகுமான் ஆர்ப்பாட்டத்தில் நோக்கம் குறித்து கண்டன உரையாற்றுகையில் மத அடையாளங்களை அணிந்து கொண்டு வரக்கூடாது என்று காரணத்தைச் சொல்லி இஸ்லாமிய பெண்களை வகுப்புகளுக்கு வராமல் தடுக்கும் பாரதிய ஜனதா கட்சி அரசு நிர்வாகம் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் பொட்டு, விபூதி, ருத்ராட்சை, சிலுவை, காப்பு போன்ற பிற அடையாளங்களை காணவில்லையா எனவும், எனவே இது திட்டமிட்டு மக்களை பிரிப்பதற்காக நடக்கும் நாடகம் எனவும் தெரிவித்தார்.
மேலும், இஸ்லாமிய பெண்கள் மற்றவர்களை போல சீருடை அணிந்து கூடுதலாக ஹிஜாப் எனும் ஆடையை அணிவதால் என்ன பிரச்சினை என்று கேள்விகள் எழுப்பி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் குளித்தலை கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், இஸ்லாமியர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் என 200-கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.









