பாஜக ஆட்சியில் உயர்கல்வி அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், உயர்கல்வி அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே தனியார் பல்கலைக்கழகத்தின் 13-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், உயர்கல்வி அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே தனியார் பல்கலைக்கழகத்தின் 13-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அங்கு மாணவ -மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது :

”புதிய இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். புதிய இந்தியாவை உருவாக்க தொழில்நுட்பம் அறிவாற்றல் திறன் என என்னென்ன தேவைப்படுகிறதோ, அவை அத்தனையும் இங்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படுவது பெருமிதம் அளிக்கிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது கல்வியின் நிலை எப்படி இருந்தது என்பதையும், தற்போதைய பாஜக ஆட்சியில் கல்வியின் நிலை எப்படி இருக்கிறது என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால், பாஜக ஆட்சியில் உயர்கல்வி அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதை புள்ளி விவரங்கள் மூலம் கூறமுடியும். பாஜக ஆட்சியில் புதிய பல்கலைக்கழகம், கல்லூரி, ஐடிஐ, ஐஐடி போன்றவற்றின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதையும் படியுங்கள் : வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஜூலை 4ல் தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 4 லட்சத்து 28 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தங்களையும் வளர்த்துக் கொண்டு, நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த, மாணவர்கள் அனைவரும் பட்டப்படிப்போடு மட்டுமல்லாமல், திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது”.

இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.