வரத்து குறைவு காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது.
சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த காய்கறிகள் இல்லாமல் சமையல் செய்வதே மிக மிக கடினம். தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை ஏறினால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல் தொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர்.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மூன்று பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகம் இருந்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்தும் தக்காளி வருகிறது. இதனால் தக்காளி பயன்பாட்டிற்கு உள்நாட்டு விளைச்சல் மற்றும் வெளிமாநில வரத்தை நம்பியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதாகவும், வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து சதமடித்தது. இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு, பண்ணை பசுமை காய்கறி கடைகளில் தக்காளியை கொள்முதல் விலைக்கே விற்பனை செய்து வருகிறது. இதன்மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இதையும் படியுங்கள் : பாஜக ஆட்சியில் உயர்கல்வி அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்
இந்நிலையில் நேற்று தக்காளி கிலோ ரூ.20 குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. வரத்து குறைந்ததன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த வியாபார கடையில் 1 கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கு தக்காளி விலை உயர்வு இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.







