தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூக நீதியைப் பின்பற்றிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை புதுதில்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நிறுவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை ஆக்குவதற்கு ஏதுவாக, தமிழ் மொழியில் தரமான சட்ட நூல்களை வெளியிடுவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “மாநிலத்தின் அலுவல் மொழியை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஆக்குவதில் உள்ள சிரமங்களை நவீன தொழில்நுட்பத்தின்மூலம் எளிதில் சரிசெய்திட முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழக அரசின் அலுவல் மொழியான தமிழை, ஆங்கிலத்துடன் சேர்த்து, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையின் அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தனது கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement: