கட்டுரைகள்

தோனி அப்செட்டான அந்த ஒரு போட்டி: 2019 ஐபிஎல் ஃபைனல் ரீவைண்ட்


ம.பவித்ரா

பாயிண்ட்ஸ் டேபிள், பிளே ஆஃப் சாம்பியன்ஷிப், வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு சென்னை, மும்பை அணிகளுக்கான போட்டி என்பது தனித்துவமானதுதான்.

ஐபிஎல்.இல் இன்று நடக்கும் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன. பொதுவாக டேபிள் டாப்பர்ஸாக இருக்கும் இரண்டு அணிகளும் இந்த ஆண்டு பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. பாயிண்ட்ஸ் டேபிளில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது முக்கியம் கிடையாது. சென்னை மற்றும் மும்பை அணி மோதும் அனைத்துப் போட்டிகளுமே சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். அதனால்தான் ஐபிஎல்.இல் இந்த அணிகளுக்கான போட்டியை “எல்கிளாஸியோ” என்று கூறுகிறார்கள். இந்தியா, பாகிஸ்தான் மோதும்போது எப்படி சுவாரஸ்யமாக இருக்குமோ,  சென்னை மற்றும் மும்பை அணி மோதும்போதும் அதுபோன்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கும். கடந்த காலங்களில் இந்த இரண்டு அணிகள் மோதிய பல போட்டிகளில் இரு அணிகளு த்ரில் வெற்றியையே பெற்றுள்ளன.  சென்னை அணி இதுவரை நான்கு முறை கோப்பையை வென்றுள்ளனர். மும்பை அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளனர். இதில், சென்னை அணி 2010இல் தன்னுடைய முதல் கோப்பையை மும்பை அணிக்கு எதிரான போட்டியில்தான் வெற்றி பெற்றது. மும்பை அணி 2013, 2015, 2019 ஆகிய 3 போட்டிகளில் சென்னை அணியை வீழ்த்திதான் கோப்பையை வென்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சாதரண லீக் போட்டியிலேயே இரண்டு அணிகளுக்கான போட்டியில் சுவாரஸ்யம் இருக்கும்போது, 2019 ஐபிஎல் ஃபைனல் போட்டியை யாருமே மறக்க முடியாது. 2019 மே 12 ஹைதராபாத் மைதானத்தில் சென்னை அணியும், மும்பை அணியும் ஃபைனலில் மோதியது. அந்த சீசனைப் பொருத்தவரையில் அதற்கு முன்பு வரை சென்னை அணியும், மும்பை அணியும்  3 முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர். இந்தப் போட்டியில் 4வது முறையாக யார் கோப்பையை வென்று சாதனை படைக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த சீசனில் சென்னை அணியை விட மும்பை அணி அதிக ரெக்கார்டை வைத்திருந்தனர். 2019 சீசனில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய 2 லீக் போட்டிகளிலும் சென்னை அணி மும்பையிடம் தோல்வி அடைந்திருந்தது. பிளே ஆஃப் இல் குவாலிஃபயர் ஒன்றிலும் மும்பை அணி சென்னை அணியை வீழ்த்தி ஃபைனலுக்கு சென்றிருந்தார்கள். குவாலிஃபயர் இரண்டில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி ஃபைனலுக்குச் சென்றது.

டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அப்போது அந்த முடிவு மிகவும் சர்ச்சைக்குள்ளானது. ரோஹித் சர்மா மற்றும் டிகாக் ஆரம்பத்திலேயே அவுட் ஆகினர். மும்பை இந்தியன்ஸ் கிட்டத்தட்ட 14 ஓவர்களில் வெறும் 101 ரன்களுக்கு, 5 விக்கெட்டுகள் எடுத்து தடுமாறிக் கொண்டிந்தனர். சென்னை அணி இந்த முறை எப்படியும் ஜெயித்துவிடும், 4ஆவது முறையாக கோப்பை நமக்குதான் என்று யெல்லோ ஆர்மி விசில் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் கிரண் பொல்லார்ட் களத்தில் இறங்கினார். எப்போதுமே பொல்லார்டுக்கும், சென்னை அணிக்கும் ஒரு ராசி உள்ளது. மஞ்சள் ஜெர்ஸியை பார்த்தாலே பொல்லார்ட் பொலந்துகட்டுவார். இது கடந்தகால வரலாறு. அன்றைக்கும் அப்படிதான் நடந்தது. அதுவரைக்கும் தடுமாறிக் கொண்டிருந்த மும்பை அணியை 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எடுக்க பொல்லார்ட் உதவினார். மூன்று ஃபோர்கள், நான்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்களை எடுத்தது.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி. சென்னை அணியைப் பொருத்தவரையில் டூப்ளெசிஸ், வாட்சன் இருவரும் ஓப்பனராக களமிறங்கினர். ஆரம்பம் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது டூப்ளெசிஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். மூன்று ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திச் சென்றார். ஆனால், அவருக்கு அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு என யாருமே சென்னை அணிக்கு கைகொடுக்கவில்லை. விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்துகொண்டே இருந்தபோது, மறுபக்கம் எல்லை சாமிபோல் நின்று வாட்சன் வெலுத்து கட்டிக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் வாட்சனின் ஆட்டம் போட்டியை சென்னை அணி பக்கம் கொண்டு வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு விக்கெட் போகும்போதும் போட்டி மும்பை இந்தியன்ஸ் பக்கம் சென்று கொண்டிருக்கும். அப்போது, வாட்சன் களத்தில் இறங்கி பவுண்ட்ரிகளை பறக்கவிட்டு மேட்ச்சை சென்னை பக்கம் இழுத்து வந்து கொண்டிருந்தார். யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை இந்தப் போட்டி அதிகரிக்கச் செய்திருந்தது.

சென்னை, மும்பை ரசிகர்கள் கடைசி வரைக்கும் பிபி டேப்லட்டை கையில் வைத்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக வாட்சன் அன்றைய போட்டியில் ஓப்பனராக களத்தில் இறங்கி கடைசி வரைக்கும் களத்தில் இருந்தார். அவருடைய காலில் காயம் ஏற்பட்டு அவருடைய ஜெர்ஸியில் ரத்தக் கறை படிந்திருந்த நிலையில், ரத்தம் சொட்டச்சொட்ட அந்த இன்னிங்ஸை அவர் ஆடினார். 59 பந்துகளில் 80 ரன்கள் அடித்தார். அதில் எட்டு ஃபோர்கள் மற்றும், 4 சிக்ஸர்கள் அடங்கும். இன்றைக்கும் அதுகுறித்துப் பேசினால் சென்னை ரசிகர்களுக்கு “கூஸ்பம்ஸ்” மொமெண்டாகத்தான் இருக்கும். அதனால்தான் சென்னை அணி சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மனதில் வாட்சனுக்கு என ஓர் தனி இடம் இருக்கும்.  ரத்தம் சொட்ட சொட்ட வாட்சன் ஆடிய அந்த ஒரு இன்னிங்ஸ் முக்கியக் காரணம்.

கடைசி ஓவர் வரை அவர் களத்தில் இருந்தாலும், எதிர்பாராதவிதமாக வாட்சன் ரன் அவுட் ஆகினார். இந்த போட்டியைப் பொருத்தவரை இரண்டு ரன் அவுட்டுகள் மும்பை இந்தியன்ஸுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஒன்று வாட்சனுடைய ரன் அவுட், இரண்டு கேப்டன் தோனியின் ரன் அவுட். இந்த இரண்டு அவுட்டுகளுமே போட்டியை முழுக்க மும்பை அணியிடம் இழுத்துச் சென்றுவிட்டது. கடைசி ஓவரை பொருத்தவரையில், மும்பை இந்தியன்ஸின் மலிங்கா வீசினார். அன்றைய தினம் லசித் மலிங்கா 4 ஓவர்கள் போட்டு கிட்டத்தட்ட 49 ரன்கள் கொடுத்திருந்தார். மலிங்காவின்  முதல் மூன்று ஓவர்களை சென்னை அணி நன்றாகவே ஆடியிருந்தது. ஆனாலும்,  டெப்த் ஓவர் கில்லியான மலிங்கா கடைசி ஓவரில் சென்னை அணியை கலங்கடிக்கச் செய்தார். கடைசி பந்தில் சென்னை அணிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் அந்த பாலை எதிர்கொண்ட  தாக்கூர் அவுட் ஆகினார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை இன்று வரை அதன் ரசிகர்கள் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இப்போட்டி குறித்து சமீபத்தில் பேசிய வாட்சன், தோனி எதற்குமே கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை. ஆனால், 2019 ஐபிஎல் ஃபைனலில் தோல்வி அடைந்தபோது தோனி வருத்தமாக இருந்ததை நான் பார்த்தேன். அதற்கு முன்போ, பின்போ நான் தோனியை அப்படி பார்த்ததே இல்லை என அந்த தருணத்தைப் பகிர்ந்திருந்தார்.

சென்னை அணி அந்தப் போட்டியின் வெற்றியை நெருங்கி தோல்வி அடைந்திருந்தாலும், வாட்சனின் ரத்தம் சொட்ட சொட்ட ஆடிய அந்த இன்னிங்ஸ் இன்றுவரை ஸ்பெஷலாகத்தான் உள்ளது. அதேநாளான மே 12 ஆம் தேதி 2022இல் இந்த இரு அணிகளும் இன்று மோதப்போகின்றன. பாயிண்ட்ஸ் டேபிள், பிளே ஆஃப் சாம்பியன்ஷிப், வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு இந்த இரு அணிகளுக்குமான போட்டி என்பது தனித்துவமானதுதான். சென்னை அணிக்கு அன்று வாட்சன் எப்படி கைகொடுத்தாரோ, அதேபோல, மும்பை அணிக்கு கைகொடுத்து வருபவர் பொல்லார்ட். குறிப்பாக சென்னை அணிக்கு எதிராக ஆடி பல போட்டிகளில் வெற்றி பெறவைத்தவர் பொல்லார்ட். 2021 ஐபிஎல் சீசனிலும் கூட லீக் போட்டியில் சென்னை அணி, மும்பை அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் 218 ரன்கள் எடுத்திருந்தார்கள். மும்பை அணி கிட்டத்தட்ட தோல்வியை சந்திக்கும் என்றிருந்த நிலையில், அணிக்காக அதிரடியாக ஆடி   வெற்றி பெற வைத்தார் பொல்லார்ட். 200 ரன்களுக்கு மேல் அடித்து சென்னை அணி தோற்ற முதல் போட்டி அதுதான்.

இன்றைக்கு பொல்லார்டின் பிறந்தநாள். இதனால், மும்பை அணிக்கு அவர் நிறைய சாதனையைக் கொடுப்பார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். சென்னை அணிக்கு வழக்கம்போல கேப்டன் தோனி இருக்கிறார். கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக கடைசி பாலில் தல தோனி ஃபோர் அடித்து வெற்றி பெறவைத்தார். தோனி சென்னை அணியைக் கரைசேர்ப்பாரா, பொல்லார்ட் பிறந்தநாளன்று மும்பை அணிக்காக சிறந்த இன்னிங்ஸை ஆடுவாரா என்று  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

யார் இந்த பவானி தேவி?

குஜராத் மக்களின் மனங்களை வென்ற “முதல்வர்” ரஜினிகாந்த்…

Jayakarthi

“கதம் கதம்” to “I AM COMING”- அரசியலை மீண்டும் தொடர நினைக்கிறாரா ரஜினி?

Web Editor