அயன் திரைப்பட பாணியில் ரூ. 6 கோடியே 58 லட்சம் ஹெராயின் மாத்திரைகளை வயிற்றில் வைத்து கடத்தி வந்த உகண்டா நாட்டு பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் போதை பொருள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டனர்.
அப்போது சார்ஜா விமானத்தில் வந்த உகாண்டா நாட்டை சேர்ந்த எலி ஜேம்ஸ் ஒப்பி(21) என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் சுற்றுலா வந்ததாக கூறி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதையடுத்து அவரின் உடமைகளை சோதனை செய்த போது அதில் எதுவும் சிக்கவில்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்த போது அவரின் வயிற்றில் ஏதோ மர்ம பொருள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது அதிகமான மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உகாண்டா நாட்டு வாலிபரை மருத்துவமனையில் சேர்த்து இனிமா கொடுத்து வயிற்றில் இருந்த பொருளை வெளியே எடுத்தனர். அப்போது மாத்திரை கேப்சூலில் அடைத்து 80 மாத்திரைகளை விழுங்கி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கேப்சூல்களை ஆய்வுக்காக அனுப்பியதில் ஹெராயின் போதை மாத்திரைகள் என தெரியவந்தது. ரூ. 6 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள 940 கிராம் எடைக் கொண்ட ஹெராயின் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
Based on intelligence, officers of AIU, Chennai Airport, intercepted a Ugandan National who arrived from Sharjah on 08.05.2022 and recovered 80 capsules containing 940 grams of Heroin having market value of ₹6.58 cr. which were swallowed by the passenger. Pax arrested. pic.twitter.com/PErwma3lIg
— Chennai Customs (@ChennaiCustoms) May 12, 2022
இது தொடர்பாக உகாண்டா வாலிபர் எலி ஜேம்ஸ் ஒப்பியை கைது செய்து ஹெராயின் போதை மாத்திரைகளை எங்கிருந்து யாருக்காக கடத்தி வரப்பட்டது. இதன் பிண்ணனியில் யார் உள்ளனர் என அதிகாரிகள் விசாரணை நடந்தி வருகின்றனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன் கோவையில் அயன் படப்பாணியில் ரூ. 4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அதே பாணியில் சென்னையில் உகாண்டா நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement: