நான் தான் பிபின் ராவத் என, விபத்தில் இருந்து மீட்கப்பட்டபோது, தன்னை தானே அடையாளப்படுத்தி கூறி இருக்கிறார் முப்படைகளின் தலைமை தளபதி.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில், கடந்த 8-ஆம் தேதி, எம்ஐ ரக ராணுவ ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. இதையடுத்து, ஹெலிகாப்டரில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினருடன் இனைந்து, அப்பகுதியை சேர்ந்தவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, படுகாயங்களுடன் இருவர் முனகி கொண்டிருந்ததை அறிந்து, அவர்களை போர்வையில் சுற்றி, மீட்டனர். அப்போது, ஒருவர் நான் பிபின் ராவத் எனவும், குடிக்க தண்ணீர் வேண்டும் எனவும் கேட்டுள்ளார். தங்கள் உடல் நலமாக இருக்கிறது, தைரியமாக இருங்கள் என ஆறுதல் கூறிவிட்டு, அவரை தூக்கி சென்றதாகவும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.

ஆனால், எதிர்பாராதவிதமாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உயிர் பிரிந்திருக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.
உயிரிழந்த 13 பேரின் உடல்கள் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டு, பாலம் விமானப்படை தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் மோடி, பிபின் ராவத்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்தும், மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உடல்கள் அடங்கிய பெட்டிகளுக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், பிபின் ராவத்தின் மகள்கள் மற்றும் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.








