பிபின் ராவத் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா உடல்களுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா உடல்களுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டு, பாலம் விமானப்படை தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் மோடி, பிபின் ராவத்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்தும், மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உடல்கள் அடங்கிய பெட்டிகளுக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், பிபின் ராவத்தின் மகள்கள் மற்றும் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்தும், மலர்த்தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, விமானப் படை தளபதி வி.ஆர்.சௌத்ரி, கடற்படை தளபதி ஹரிகுமார், ராணுவ தளபதி நரவனே ஆகியோர் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்தும், மலர்த்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

விபத்து நடத்த பகுதி

தொடர்ந்து டெல்லியில் உள்ள பிபின் ராவத்தின் இல்லத்தில், இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக இருவரது உடல்களும் வைக்கப்பட உள்ளது. அதன்பின், இருவர் உடல்களும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு டெல்லி கன்டோன்மென்டில் உள்ள மயானத்தில் அரசு மரியாதை அளிக்கப்படவுள்ளது. பின்னர் அவர்கள் உடல்களும் தகனம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லி கொண்டு வரப்பட்ட தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு மகள்கள் கிர்த்திகா, தரிணி ஆகியோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தாய் மற்றும் தந்தையின் உடலைப் பார்த்து மகள்கள் கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்திய நிகழ்வு பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.