முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டின் 16-வது பறவைகள் சரணாலயம்; மரக்காணம் கழுவெளி

தமிழ்நாட்டின் 16-வது பறவைகள் சரணாலயமாக மரக்காணம் கழுவெளி அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் – வானூர் வட்டத்தில் 5 ஆயிரத்து 151 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது கழுவெளி சதுப்பு நிலம். கடல் நீரும், நன்னீரும் சங்கமிக்கும் இடத்திற்கு அருகாமையிலேயே ரம்மியமான சூழலில் காணப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பறவைகள், இனப்பெருக்க காலத்தின்போது இப்பகுதிக்கு வந்து ஒன்று சேர்கின்றன. அச்சமயங்களில் மிகவும் அழகாக காணப்படும் இந்த கழுவெளி பகுதி. பறவைகள், அதிக அளவில் வந்து செல்லும் இப்பகுதியை “பறவைகள் சரணாலயம்” ஆக அறிவிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூலம் கோரிக்கை எழுந்தது.

இந்த நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், கழுவெளி சதுப்பு நிலத்தை 16-வது பறவைகள் சரணாலயமாக தற்போது அறிவித்திருக்கிறது தமிழ்நாடு வனத்துறை.

தமிழ்நாட்டில் புலிக்காட்டுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஏரி இது தான். இந்த சதுப்பு நிலப்பகுதியை சுற்றி 220 ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளன. இந்த கழுவெளி பகுதியில் ஆண்டு முழுக்க தண்ணீர் இருக்கும். இதனால் இங்கு அதிகளவில் மீன், நண்டு, இறால் போன்றவை வளர்கிறது. இந்த கழுவெளி பகுதியில் நிறைந்து இருக்கும் தண்ணீரால் கடல் நீரும் உட்புகாதவாறு பாதுகாக்கப்படுகிறது, இதனால் இப்பகுதியில் விவசாயமும் செழிப்பாக நடைபெற்று வருகிறது.

கழுவெளி பகுதிக்கு பர்மா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா மற்றும் பல நாடுகளில் இருந்தும் உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காக அதிக அளவிலான பறவைகள் வந்து குவிகின்றன. கூளைக்கடா (பெலிக்கன்), பூ நாரை, மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி மூக்கன், பாம்பு தாரை போன்ற பறவைகளை இங்கு அதிகம் பார்க்க முடியும். குறிப்பாக அழிவின் விளிம்பில் உள்ள பறவைகள் கூட அதிக அளவில் இங்கு வருகின்றன. சரணாலயமாக அறிவிக்கப்பட்டதுடன் பறவைகளை பாதுகாக்கப்பதற்கான முயற்சிகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் அருகாமையில் உள்ள கிராம வாசிகள்.

அரசின் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று, இதனால் பறவைகளுடன் சேர்த்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

மியான்மரில் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை

Halley Karthik

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Arivazhagan CM

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் ஆலோசனை

Ezhilarasan