உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கி இன்று (அக்.30) புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பயணம் செய்த 5 பயணிகள் மற்றும் ஒரு விமானி என மொத்தம் 6 பேரின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர், இன்று பிற்பகல் சுமார் 1.14 மணிக்கு பத்ரிநாத்தில் இருந்து புறப்பட்டது. டேராடூனில் உள்ள சஹஸ்திரதாரா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஜோஷிமத் பள்ளத்தாக்கு பகுதியில் திடீரென அதிகாரிகளுடனான தகவல் தொடர்பை இழந்துள்ளது.
தொடர்ந்து, ஹெலிகாப்டரின் கண்காணிப்பு சிக்னலும் துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவசர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கிடையே, ஹெலிகாப்டர் மாயமான பகுதியில் புகை எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, சமோலி மாவட்டம் ஜோஷிமத் அருகே சாயி கிராமப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.
விபத்துக்கு மோசமான வானிலை காரணமா?
ஹெலிகாப்டர் விபத்துக்கான உறுதியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்ரிநாத் – ஜோஷிமத் வழித்தடத்தில் பனிப்பொழிவு, மழை மற்றும் கடுமையான பனிமூட்டம் காரணமாக பார்வைத்திறன் குறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், சமோலி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரின் நிலை மற்றும் உயிரிழப்பு குறித்த இறுதி விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
10 ஆண்டுகளில் 13 ஹெலிகாப்டர் விபத்துகள்!
உத்தரகாண்டில் அடிக்கடி நிகழும் ஹெலிகாப்டர் விபத்துகள் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இமயமலைப் பகுதிகளின் கடினமான நில அமைப்பு, திடீர் வானிலை மாற்றங்கள், பலத்த காற்று மற்றும் பார்வைத்திறன் குறைவு ஆகியவை ஹெலிகாப்டர் பயணங்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றன. குறிப்பாக, கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்குப் பக்தர்களை அழைத்துச் செல்லும் ஹெலிகாப்டர் சேவைகளின்போது விபத்துகள் அதிகம் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2016 முதல் 2026 வரையிலான சுமார் 10 ஆண்டுகளில் உத்தரகாண்டில் குறைந்தது 12 ஹெலிகாப்டர் தொடர்பான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 5 பெரிய விபத்துகளும், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவங்கள், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் தரையில் நிகழ்ந்த உயிரிழப்புகள் உள்ளிட்ட 7 சம்பவங்களும் அடங்கும்.
இந்தியாவின் ஹெலிகாப்டர் விபத்துகளில் உத்தரகாண்டுக்கு முதலிடம்!
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் மாநிலங்களவையில் அளித்த தகவலின்படி, 2020 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பதிவான 12 முக்கிய ஹெலிகாப்டர் விபத்துகளில் 7 உத்தரகாண்டில் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் நாடு முழுவதும் 30 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் 21 பேர் உத்தரகாண்டில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மீண்டும் விபத்தில் சிக்கியிருப்பது, உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் பாதுகாப்பு மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.




