ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் என்பவர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளம் மூலம் அவதூறு பரப்புதல், சமூக வலைத்தள குழுவில் களங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த காவல்துறை ஷிபினை கைது செய்துள்ளது. இதையடுத்து, குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள், நாகர்கோயில் கிளை சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று, தமிழ்நாட்டையும், காஷ்மீரையும் ஒப்பிட்டு, தமது ட்விட்டர் பக்கத்தில், மாரிதாஸ் என்பவர் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து மதுரை மாநகர திமுக தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் அவர் மீது புகார் அளித்தார்.
இதையடுத்து மதுரை புதூர் பகுதியில் வீட்டிலிருந்த மாரிதாசை சைபர் கிரைம் போலீசார், நேற்று கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில ஆஜர் செய்ய கொண்டு சென்ற போது, காவல்துறையினர் வாகனத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
மாரிதாஸ் மீது, மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த போலிசார், மதுரை மாவட்ட 4 வது குற்றவியல் நடுவர் நீதிபதி சுந்தர காமேஸ்வர முன்பு ஆஜர்படுத்தினர். மாரிதாஸை வரும் 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார், இதனையடுத்து மாரிதாஸை, மதுரை மத்திய சிறைக்கு அழைத்து சென்ற போலீசார், பின்னர் உத்தமபாளையம் கிளை சிறையில் அடைத்தனர்.








