சென்னை கொளத்தூரில் கன மழையால் வீட்டு சுவர் இடிந்து காயமடைந்தோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக கொளத்தூரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும், கனமழை காரணமாக சபாபதி தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், தமது சொந்த தொகுதியான கொளத்தூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீட்டு சுவர் இடிந்து காயமடைந்த ஜெயலட்சுமி, பி.எஸ்.சுதா, மோகனா ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.
வள்ளியம்மாள் தெரு, ஜிகே.எம் காலனி பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின். அப்போது, சந்தித்த சிறுவர், சிறுமியருடன் புகைப்படம் எடுத்து, இனிப்புகளையும் வழங்கினார். அப்போது, புதுமண தம்பதியை சந்தித்த முதலமைச்சர், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.








