நேபாளத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன 28 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சங்குவாசபா, தப்லேஜங், பஞ்ச்தார் மற்றும் தன்குடா ஆகிய நான்கு மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது. இந்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையை தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது மட்டுமின்றி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு நேபாளத்தின் சங்குவாசபாவில் 21 பேரும், பஞ்சதாரில் 4 பேரும், தப்லேஜங் மாவட்டத்தில் 3 பேரும் என மொத்தம் 28 பேர் சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் அனைவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








