பழங்குடியினத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக புகார் : தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தருமபுரி அருகே ஊர் கட்டுப்பாட்டை மீறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் சுமார் 7 ஆண்டுகளாக 4 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சிட்லிங் மலைப்பகுதிகளில் உள்ள நாய்குத்தி…

தருமபுரி அருகே ஊர் கட்டுப்பாட்டை மீறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் சுமார் 7 ஆண்டுகளாக 4 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சிட்லிங் மலைப்பகுதிகளில் உள்ள
நாய்குத்தி கிராமத்தில் மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சின்னக்கரியன்
காமாட்சி என்கின்ற வயதான தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு
மாதேஸ்வரி என்ற மகளும், அன்பு என்ற மகனும் உள்ளனர்.

மாதேஸ்வரிக்கு திருமணம் ஆகி கணவனால் கைவிடப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர் சேலத்தில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். மாதேஸ்வரிக்கு வீடு இல்லாததால் தன்னுடைய விவசாய நிலத்தில் இரண்டு சென்ட் அளவில் வீடு கட்டிக் கொள்ள தாய் அனுமதித்துள்ளார். அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு ஒன்று கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு வீடும் கட்டி முடிக்கப்பட்டது.

காமாட்சியின் விவசாய நிலத்தின் அருகே மலைவாழ் பழங்குடி இனத்தை சாராத சேலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் 7 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார். இந்த நிலையில் மாதேஸ்வரி வீடு கட்டிய இடத்தை, புறம்போக்கு பொது வழி பாதை எனவும் குடியிருக்கும் வீட்டை அகற்ற வேண்டும் என தெரிவித்து ஊர் கவுண்டர் ஏழுமலை மற்றும் ஆறுமுகக் கவுண்டர் உள்பட அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர்
வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். பின்பு இது குறித்து நிலம் அளக்கப்பட்டு கட்டி
முடிக்கப்பட்ட வீடும் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

இதுகுறித்து அரூர் உரிமையியல் நீதிமன்றத்தை தொடர்ந்து சென்னை உயர்
நீதிமன்றத்தில் அன்பு வழக்கு தொடர்ந்தார். இதன் காரணமாக உரிமையை கேட்கும் வகையில் நீதிமன்றம் சென்ற காமாட்சி, சின்னகரியன், அவருடைய மகன் அன்பு
மருமகள் சங்கீதா, மகள் மாதேஸ்வரி மற்றும் சந்தோஷ், பிரியாமணி, கனிமொழி உள்ளிட்ட 8 பேரை கிராம மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.

மேலும் இந்த குடும்பத்தாருடன் கிராம மக்கள் யாரும் பேசக்கூடாது குடிநீர் வழங்கக்கூடாது, பண்டமாற்றங்கள் இருக்கக் கூடாது, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்துள்ளனர்.

மாதேஸ்வரியின் மகள் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 4 ம்வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவள் எனவும், இங்கே படிக்கக் கூடாது, சத்துணவு வழங்க கூடாது என ஊர் கவுண்டர் மகன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை பொருட்படுத்தாமல் பள்ளிக்கு வந்த மாணவியிடம் டம்ளரில் சிறுநீரை கழித்து, இது குளிர்பானம் என அருந்தச் சொல்லி வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அன்பு மகள் பிரியாமணி தனது தோழிகளுடன் பேச முடியாமல் காட்டுப்பகுதிகளுக்கு சென்று மறைந்து நின்று பேசியுள்ளார். இதனை ஊர் கவுண்டரிடம் சிலர் தெரிவித்ததால் அவர்களுக்கும் 3 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்ததால் யாரும் பேசுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவிய அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் குடும்பமும்
ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் பழங்குடியின மக்கள் இனத்தை சாராத ஒருவர் மலைவாழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தை வாங்கவோ விற்கவோ கூடாது என சட்டம் கூறுகிறது. ஆனால் ஆறுமுக கவுண்டருக்கு
அப்பகுதியை சேர்ந்தவர்களே உதவி அளித்து வருகின்றனர்.

கட்டுப்பாட்டுக்கு பயந்து திருப்பூருக்கு சென்ற அன்பு சங்கீதாவின் மகள் பிரியாமணி கடந்த 2022 ஆம் ஆண்டு ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பியுள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தனிநபர் ஒருவரின் பிரச்சனைக்காக ஒரு கிராமமே சேர்ந்து நான்கு குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.