உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை வலுபெற்ற நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது.
மேலும், மலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதுடன் பாறைகள், மரங்களும் விழுந்தன. இதனால் சீரமைப்பு பணிகளுக்காக உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 8 முதல் 10 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரும் 13 ஆம் தேதி வரை 592 ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







