பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு பெய்த கனமழையால் மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு சாலைகளில் வெள்ளம் நீர் தேங்கியது. பெங்களூரு விமான நிலையம், மகாதேவபுரா, தொட்டனேகுண்டி, சீகேஹள்ளி ஆகிய பகுதியில் 60 முதல் 80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் வெள்ள நீர் தேங்கியது. இதனால், வாகனங்கள் நீரில் மூழ்கியதுடன் பல்வேறு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிவாஜி நகர் பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் தங்கள் வாகனங்களை இழுத்துப் பிடித்துக் கொண்டு போராடிய காட்சிகளைக் காண முடிந்தது. மேலும், சேஷாத்திரிபுரம் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. 
மழை தொடரும் என்று கர்நாடக பேரிடர் கண்காணிப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது. போக்குவரத்து போலீசாரும் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். பெங்களூரு நகரில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 1,704 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் மூலம் மழை பொழிவில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கர்நாடக அரசு காட்டிய மெத்தனமே இத்தகைய நிலைக்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் பதிவிட்டு வருகின்றனர்.
- வெற்றிநிலா







