வடமாநிலங்களில் வரலாறு காணாத கனமழை நீடிக்கும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் மழை-வெள்ளம் தொடா்பான அசம்பாவிதங்களில் 22 போ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வட மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில், பருவமழை தற்போது தீவிரமடைந்து டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது.
கனமழையால் நிலச்சரிவு, திடீர் வெள்ளப்பெருக்கு, மரங்கள் முறிந்து விழுதல், சாலைகள் சேதம் உள்ளிட்ட பல பாதிப்புகள் பரவலாக நிகழ்ந்து வருகிறது.
டெல்லி
தலைநகரான டெல்லியில் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி 17 செ.மீ. மழை பதிவானது. அதன் பிறகு நேற்று ஒரே நாளில் 15.3 செ.மீ. மழை பெய்துள்ளது. 41 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான அதிகபட்ச மழை இதுவாகும். முக்கிய சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது.
ஜம்மு – காஷ்மீர்
ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சாலையில் சுமார் 3,000 வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. ஜீலம் நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இமாச்சல பிரதேசம்
மலைப் பிரதேசமான இமாச்சல பிரதேசத்தில் சிம்லா, குலு, மண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் நேற்று மட்டும் 13 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
உத்திர பிரதேசம்
உத்திர பிரதேசம் தலைநகர் லக்னோ உட்பட 39 நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளன. மொரதாபாத் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பகுதிகளில் இருந்து 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இருந்து கேதார்நாத் கோயிலுக்கு 11 பக்தர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனம் நேற்று தெஹ்ரி கார்வால் பகுதியில் சென்றபோது நிலச்சரிவில் சிக்கியது. இதன்காரணமாக கங்கை நதியில் வாகனம் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 5 பேர் மீட்கப்பட்டனர். 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தின் மொத்தம் உள்ள 53 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் தலைநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹரியாணா
ஹரியாணாவில் சண்டிகர் உள்ளிட்ட 55 நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூட அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ள நிலையில், ராணுவமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
பஞ்சாபின் மொகாலி நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் 5 பேர், காஷ்மீரில் 4 பேர், உத்திர பிரதேசத்தில் 4 பேர், உத்தராகண்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
வட மாநிலங்களை மழை வெள்ளம் வாட்டி வதைப்பதால். அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இதுவரை 22 பேர் மழை, வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா, கோவா, குஜராத், மேற்குவங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
வடஇந்தியாவில் மழை-வெள்ளம் காரணமாக, ஃபெரோஸ்பூா் விரைவு ரயில், அமிர்தசரஸ் விரைவு ரயில் உள்பட 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; மேலும் 12 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன என்று வடக்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.











