விஜய் மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நாளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் பேச்சு, அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக அமைந்தது. மேலும் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் பரவலாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்து செயல்படத்திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க விஜய் திட்டமிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனையும், பின்னர் போட்டோஷூட் நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வானது, நாளை காலை 9 மணிக்கு பனையூரில் உள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளது.








