காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று அழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னைக்கு கிழக்கே சுமார் 430 கி.மீ. தொலைவில் புதுச்சேரி மேற்கு-வடமேற்கு நோக்கி இன்று நகர்ந்து வட தமிழகக் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறும்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும்- ஸ்ரீ ஹரிகோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு, கடலூர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







