தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நவம்பர் 12ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சிவகங்கை, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாகா அறிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக இன்று அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.