அமைச்சரவை விரிவாக்கம்: நாளை ஐயுஎம்எல் மாநில நிர்வாகக்குழு அவசரக் கூட்டம்…!

ஐயுஎம்எல்லின் மாநில நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய், கடந்த 10 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். மேலும் அண்மையில் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதற்கிடையில் தமிழ் நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு இணைய வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன், தவெக அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து கட்சியினருடன் ஆலோசித்து நாளை காலை 11 மணிக்கு எங்கள் முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நாளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் நாளை (21.05.2026) காலை 11.00 மணியளவில் தலைமை நிலையம் காயிதே மில்லத் மன்ஸில் 36, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை-1 என்ற முகவரியில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் தமிழக அரசியலில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் செய்ய வேண்டியிருப்பதால் மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்று தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிடுமாறு அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.