கனமழை : செந்தூர் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தம் – 1000 பயணிகள் உணவின்றி தவிப்பு.!

கனமழை காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் 1000 பயணிகள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி…

கனமழை காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் 1000 பயணிகள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: தொடர் கனமழை | தென் மாவட்டங்களில் உதவிகள் கோர வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு!

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 100 % வெள்ள நீர் ஊருக்குள் வரும் என்பதால் தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அதிகாரிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டார். மேலும் அரசு வாகனங்களைக் கொண்டு ஊர் மக்களை 100 % அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் திருச்செந்தூரில் இருந்து நேற்று சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ், நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.  1000க்கும் மேற்பட்ட பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  எனவே அதிகாரிகள் உடனடியாக மீட்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வேயில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினரை பயணிகளை மீட்பதற்கு கோரிக்கை விடுத்த நிலையில் மலை வெள்ளத்தின் காரணமாக சம்பவ இடத்திற்கு செல்ல முடியவில்லை என தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரயில் பயணிகள் ரயில் நிலையத்தில் உணவின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.