ஐரோப்பாவில் சீதோஷண நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெப்பம் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. இரவிலும் கூட வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்த வெப்பத்தை தாங்க முடியாமல் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை மக்கள் நாடி வருகின்றனர். இந்த வெயில் காரணமாகப் பல உயிரிழப்புகள், மின்சாரத் துண்டிப்பு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் சராசரியை விட, ஐரோப்பா 2 மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார். இந்த நிலையில் கடும் வெப்பம் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 1,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினின் பொதுச் சுகாதார நிறுவனமான ‘கார்லோஸ் III சுகாதார நிறுவனம்’ (Carlos III Health Institute) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் கடுமையான வெப்பம் காரணமாக 1,028 பேர் உயிரிழந்துள்ளனர். 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள், ஸ்பெயின் வரலாற்றிலேயே மிக அதிக வெப்பநிலை பதிவான காலப்பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், இயல்பான அளவை விட 3.2°C வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதேவேளை, பிரான்ஸிலும் இந்த வெப்ப அலை தீவிரமடைந்ததில் இருந்து இதுவரை 1,000க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஸ்பெயின் தனது வரலாற்றிலேயே மிக வெப்பமான முதல் ஆறு மாதங்களை எதிர்கொண்டுள்ளது.




