இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி முதலாவது டி20 போட்டியில் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்ததும், இந்திய அணி முதலில் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களில் சஞ்சு சாம்சன் 1 ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 190 ரன்கள் என்ற வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. இங்கிலாந்து அணியின் சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளும், அடில் ரஷீத் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணி விளையாட தயாரான நிலையில், மழை பெய்து குறுக்கீடு ஏற்பட்டது. இதனால், ஆட்டம் பாதிக்கப்பட்டது. போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு 64 ரன்கள் இலக்காக கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை விடாமல் பெய்ததால், போட்டி நடக்கும் களம் மூடப்பட்டது. ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனை தொடர்ந்து போட்டி கைவிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் இரண்டாவது டி20 போட்டி வருகிற ஜூலை 04-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது.




