நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தி பேசியதாக பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் தொடங்கும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் முன்னாள தேசிய செயலாளர் ஹெச். ராஜா நீதிமன்றத்தைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசியது தொடர்பாக வழக்கில் விசாரணை நடைபெறவில்லை எனக்கூறி வழக்கறிஞர் துரைச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஹெச்.ராஜா தலைமறைவாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவர் காரைக்குடியில்தான் உள்ளார் எனவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹெச்.ராஜா மீது பதியப்பட்ட குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்தார். மேலும் அடுத்த மாதம், 23ம் தேதி திருமயம் நீதிமன்றத்தில் ஹெச். ராஜா மீதான வழக்கு விசாரணை தொடங்க இருப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மனுதாரரின் குற்றச்சாட்டை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம், விநாயகர் சதுர்த்தியின்போது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், மெய்யபுரம் அருகே உள்ள மசூதி அருகில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மேடை அமைக்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் தடையை மீறி அந்த இடத்தில் மேடை அமைக்க பாஜக முயற்சித்தது. மேலும் அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஹெச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே மேடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதற்கு ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தை கொச்சையாக திட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ஹெச்.ராஜா மீது வழக்கு பதியப்பட்டாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கும் என தமிழ்நாடு அரசு தற்போது தெரிவித்துள்ளது.







