குடும்ப தகராறில், பொறியாளரான மனைவியை கொலை செய்து சூட்கேசில் மறைத்து எடுத்துச் சென்ற கணவரை காவல்தறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் மென்பொறியாளர் புவனேஸ்வரி. இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்து வந்துள்ளார். அதிக ஊதியம் பெற்று வந்த இவர், ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி வரும் சமூக ஆர்வலர் ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவரை, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
வேலைக்கு எங்கும் செல்லாத கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி, மனைவியிடம் அதிக அளவில் பணம் பெற்று சுயவிளம்பரத்திற்காக அதிகசெலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்த நிலையில், கணவருக்கு பணம் கொடுப்பதை புவனேஸ்வரி படிப்படியாக குறைந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மனைவியை ஸ்ரீகாந்த் ரெட்டி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மனைவியின் உடலை பெரிய சூட்கேசில் வைத்து, கையில் குழந்தையையும் தூக்கிக்கொண்டு, இவர், காரில் சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர் மனைவியின் உடலை திருப்பதி அரசு மருத்துவமனையின் பின்புறம் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, ஒன்றும் தெரியாது போல் குழந்தையுடன் வீட்டிற்கு வந்துள்ளார். மனைவி புவனேஸ்வரிக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாகவும், அவரது உடலை தன்னிடம் ஒப்படைக்காமல் எரித்து விட்டதாகவும் உறவினர்களிடம் கூறி நாடகமாடியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்ட போதுதான், மனைவியை அவர் கொலை செய்துள்ளது வெளி உலகுக்கு தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர், மனைவியை கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







