“உடல் நலம் தேறி வருகிறது” – பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய உடல்நலம் தேறிவருவதாக முகநூலில் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த சில வாரங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று…

பாமக நிறுவனர் ராமதாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய உடல்நலம் தேறிவருவதாக முகநூலில் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த சில வாரங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொண்டர்களைச் சந்தித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமதாஸுக்கு திடீரென தொண்டை வலி ஏற்பட்டது. இதையடுத்து, ராமதாஸ் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், தான் உடல்நலம் தேறி வருவதாக தனது முகநூல் பக்கத்தில் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவரது முகநூல் பதிவில், உடல் நலம் தேறி வருகிறேன்… நடைப்பயிற்சி மேற்கொண்டேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்றுடன் 7 நாட்கள் ஆகின்றன. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்து வருவதால் எனது உடல் நலம் நன்றாகத் தேறி வருகிறது. நான் இப்போது நலமாக இருக்கிறேன்.

இன்று காலை உரிய பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி 15 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொண்டேன். அதனால் சற்று புத்துணர்ச்சி கிடைத்தது. பாட்டாளி சொந்தங்களை அடுத்த சில வாரங்களில் சந்திக்கும் போது இன்னும் கூடுதல் புத்துணர்ச்சி கிடைக்கும். பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? என்பதை அறிய விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.