“ஆளுநரின் அறிவுறுத்தல் கூட்டாட்சிக்கு விரோதமானது!” – நிஜாம் முகைதீன் கண்டனம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டதற்கு எஸ்டிபிஐ மாநில செயலாளர் நிஜாம் முகைதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வரும் பண்பாட்டு மரபுகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி புதிய வரிசையைப் பின்பற்ற வலியுறுத்தியுள்ள ஆளுநரின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள், சட்டமன்றம் மற்றும் அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதமும் இசைக்கப்படுவதே தமிழ்நாட்டின் மரபும் சட்டப்பூர்வ நடைமுறையும் ஆகும். தமிழ்த்தாய் வாழ்த்து இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலமைந்த பல்கலைக்கழகத்திலேயே, அந்தத் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறந்தள்ளத் துணிவது தமிழ் மக்களின் உணர்வை உரசிப் பார்க்கும் செயலாகும்.

ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், மாநில அரசுகளின் இறையாண்மையையும் பண்பாட்டு உரிமைகளையும் மதித்துச் செயல்பட வேண்டுமே தவிர, தங்களின் அதிகார எல்லையை மீறி மாநில மொழிக்கும் உணர்வுக்கும் எதிராகத் தன்னிச்சையாக முடிவெடுப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் விரோதமானது. மாநில மொழிகளுக்கும் பண்பாடுகளுக்கும் முன்னுரிமை அளிப்பதே இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும். அதைச் சிதைக்கும் வகையில் செயல்படும் ஆளுநரின் இந்த உரிமை மீறல் போக்கை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பல்கலைக்கழக நிர்வாகமும் மாநில அரசும் ஆளுநரின் இந்தத் தன்னிச்சையான உத்தரவுக்குப் பணியாமல், மாநிலத்தின் பாரம்பரிய மரபையும் தமிழ்த்தாய் வாழ்த்தின் முதன்மைத்துவத்தையும் உறுதியோடு நிலைநிறுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.