சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒன்றான தியாகராய நகரில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் வாரம் ஒரு முறை தளவுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரிய கடைகள், துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கலாம் என கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் வார இறுதி நாட்களை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் தி நகர், பல்லாவரம் சந்தை உள்ளிட்ட இடங்களில் கூடியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் இன்று மாலை தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூட்டம் சேருவதைத் தவிர்க்க வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள், வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்த தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் வணிக நிறுவனங்களில் நுழைவாயிலில் வெப்பநிலை பரிசோதனைக் கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார்.







